முதலமைச்சர், அமைச்சர்கள் புறக்கணிப்பு: தமிழரசு கூட்டமானது அமர்வு

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி இன்று கூடிய வடமாகாணசபை அமர்வு வெறுமனே தமிழரசின் கட்சிக்கூட்டமாகிப்போயுள்ளது.முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எவரும் கூட்டத்தில் பங்கெடுக்காது புறக்கணித்துவிட்டனர்.வருகை தந்திருந்த டெலோ சார்பு அமைச்சரான குணசீலன் தனது கட்சித்தீர்மானப்படி தானும் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறியிருந்தார்.டெலோ சார்பு உறுப்பினர்கள் அனைவரும் மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுநருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கெதிராக தமது கண்டனத்தை வெளிப்படுத்துவதாக கூறியே வெளிநடப்பு செய்திருந்தனர்.

அதே போன்றே முஸ்லீம் தரப்புக்களும் அமர்வை பெரும்பாலும் புறக்கணித்தமையால் அமர்வு தமிழரசுக்கட்சியின் கட்சி கூட்டமாகிப்போயிருந்தது.
முன்னதாகவே வடமாகாணசபையின் விசேட அமர்வினை கூட்டினாலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாதென முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.

சில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதனால்த்தான் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் முன் வழக்கு இருக்கும் போது எந்தளவுக்கு அதன் உள்ளடக்கப்பொருள் பற்றி விமர்சிக்கலாம் என்பது மன்றாய்வில் கோட்பாட்டின் பால்ப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நான் மாகாணசபையின் கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் நேரில் சென்று ஒப்புவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேனென முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்றைய அமர்வில் கலந்து கொண்டு முதலமைச்சரிற்கு தலையிடி தர முன்கூட்டியே தயார் நிலையில் வந்திருந்த எதிர்கட்சி தலைவர் தவராசா முதல் சயந்தன் வரையாக நீட்டி முழங்கியபோதும் வந்திருந்த கட்சிக்காரர்களும் ஊடகவியலாளர்கள் சிலருமே அதனை கேட்டுக்கொண்டிருந்த பரிதாபம் அரங்கேறிவருகின்றது.

No comments