இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தயாராம்?

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, இந்திய மீனவர்களின் 173 படகுகளையும் விடுவிப்பதற்கு உள்ளுர் மீனவர்களில் ஒரு பகுதியினர் ஆதரவளித்துள்ளநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பல வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை, இவ்வாறு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் அந்த படகுகள் விடுவிப்பு தொடர்பில், மீன்பிடித் திணைக்களம் மற்றும் கடற்படையினரினால் வழங்கப்படும் அறிக்கையின் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சட்டவிரோதமாக கடலில் கைது செய்யப்படும் மீனவர்கள் உடனுக்குடன் விமானம் மூலம் தாயகம் அனுப்பும் செயல்பாட்டினை  மாதகல் மேற்கு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் விநாயமூர்த்தி - சுப்பிரமணியம் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

2018ம் ஆண்டின் 2ம் இலக்க திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பு குறைந்த்து 3 அல்லது 4 மாதங்கள் ஏனும் இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அது ஓர் சிறிய அச்சமாக இந்திய மீனவர்களிற்கு இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பளிக்கும்போது உடனடியாகவே விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

எந்தவொரு குற்றப்பணமும் கிடையாது. ஒத்தி வைக்கப்பட்ட காலத்திற்குள் மீண்டும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தால் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இது இந்திய மீனவர்களிற்கு மேலும் ஆர்வத்தை அதிகரிக்குமோ என்ற அச்சமே எம்மிடத்தில் உள்ளது. அதாவது விமானத்தில் இலவசமாக பயணிக்க விரும்பும் மீனவர் படகில் எல்லை தாண்டினால் சில நாட்களில் விமானத்தில் போகலாம் என இந்திய மீனவர்கள் எண்ணினால் இங்கு வரும் மீனவர்கள் தொகையை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி உண்டு. ஏனெனில் மீனவர்கள் தொழில் புரியும் படகுகள் அதிகமாக அவர்களிற்கு சொந்தமானது கிடையாது . அதன் உரிமையாளர் பெரும் முதலாளிகளாவர். எனவே கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிற்கு கண்டிப்பாக குற்றப்பணம் விதிக்க வேண்டும் என அமைச்சை கோரவுள்ளோமெனவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

No comments