வடக்கிலும் கல்வித்துறை இன்று முடங்கியது!

இலங்கை கல்வித்துறையில்  அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்களுக்கு 1000 க்கும் அதிகமான நியமனங்கள் பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் அரசியல் ரீதியான நியமனங்களை கண்டித்து அழைப்புவிடுக்கப்பட்ட போராட்டத்தினால் வடக்கின் கல்வித்துறை முடங்கிப்போனது. 

கல்வித்துறையை சீரழிக்கும் இத்தகைய நியமனங்களை எதிர்த்து இன்று 4ஆம் திகதி பாடசாலைகள், கல்வி அலுவலகங்களை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு வடக்கிலும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. 
கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று 4 ஆம் திகதி புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்திருந்தார்.


இன்று புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இத்தகைய முறையற்ற நியமனங்கள் - எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து - அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது - மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்புவிடுத்திருந்தார்.

எனினும் காலைவேளை ஒரு பகுதி மாணவர்கள் பாடசாலைகளிற்கு வருகை தந்திருந்த போதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்மையால் அவர்கள் நேரத்துடனேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மறுபுறம் தூர இடங்களிலிருந்து பாடசாலை மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சில இடங்களில் வருகை தந்த மாணவர்கள் சகிதம் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.எனினும் பெரும்பாலான பாடசாலைகள் முடக்கப்பட்டேயிருந்தன.

No comments