அனந்தி எங்கள் வீட்டுப்பிள்ளை:டக்ளஸ் விளக்கம்!

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் எங்கள் வீட்டுப்பிள்ளை.அதனாலேயே அவருக்கு ஆதரவளிக்கவேண்டியிருப்பதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.அனந்தி கைத்துப்பாக்கி கோரிய விவகாரத்தில் பழிவாங்கப்படுவதாக தெரிவித்து யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வில் ஈபிடிபி கட்சி 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்திருந்தது.

இது தொடர்பில் கட்சி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பிய போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அத்துடன் அமைச்சர் அனந்தியின் சகோதரன்  ஒருவர் தனது நண்பராக தமது அமைப்பில் இருந்திருந்தமையினை  நினைவுகூர்ந்துள்ள டக்ளஸ் இதனால் குரல் கொடுக்கவேண்டிய கடமையிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோன்றே முதலமைச்சரிற்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தின் போது தன்னிடம் ஆதரவு கோரி டக்ளஸ் வந்திருந்ததையும் டக்ளஸ் அப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இதனிடையே யாழ் மாநகர சபையின் சபை அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அனந்தியின் கைத்துப்பாக்கி விடயத்தில்; சபையில் ஆட்சேபனை கொண்டுவரப்பட வேண்டும் என்று யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த விடயத்திற்கு சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு கொடுக்காத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன குறித்த சம்பவத்தை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளன.

இதனிடையே வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களானது இனிவருங்காலத்தில் அரசியல் பிரவேசத்திற்கு வரவுள்ள பெண்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. பெண்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் இனியும் நடைபெறக் கூடாது என்பதை வலியுறுத்தி சபை கண்டிக்க வேண்டும். ஆனால் எமது இந்த சபை அதற்கு இடங்கொடுக்கவில்லை. 

அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி உள்ளதா அல்லது இல்லையா என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம். அது தொடர்பில் நாம் அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அரசியலுக்கு முன்வந்துள்ள ஒரு பெண் உறுப்பினரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடானது அரசியலுக்கு வர இருக்கும் பெண்களுக்கு ஒரு அச்ச நிலையை உருவாக்குகின்றதென றெமீடியஸ் ஊடகங்களிடையே கருத்து தெரிவித்திருந்தார்.

No comments