டெனீஸ்வரனை எட்டிப்பார்த்திருக்காத அதிகாரிகள்!

தனது அமைச்சின் கீழுள்ள அதிகாரிகளை தன்னை வந்து சந்திக்க முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடுத்துள்ள அறிவிப்பினை எவருமே பொருட்படுத்தவில்லை.இன்று மன்னாரிற்கு வருகை தருமாறு பா.டெனீஸ்வரன் தனது முன்னைய திணைக்கள தலைவர்களிற்கு அழைப்பினை விடுத்திருந்த போதும் எவருமே அப்பக்கம் எட்டிப்பார்த்திருக்கவில்லை.

இதனிடையே பா.டெனீஸ்வரனின் அழைப்பினையடுத்து பெரும்பாலான அதிகாரிகள் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளரது ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரியவருகின்றது.

இதனிடையே முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை இதுவரை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்கின்றார் எனவும், அவரது அமைச்சுப் பொறுப்புகளைப் பங்கிட்டு புதியவர்களுக்கு வழங்கி வெளியிட்ட அரசிதழ் இல்லாமல் செய்யப்படுவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கமைவாக தனது அமைச்சு மற்றும் செயலரை தருமாறு கோரி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் குரே, டெனீஸ்வரனை உள்ளடக்கிய புதிய அமைச்சரவைப் பட்டியலைத் தருமாறு வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்வதற்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இதனடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments