உரிமைக்குரல் ஓயாது:முதலமைச்சர் சபதம்!

இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்கள்.அவர்கள் இன்று ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டி வந்துள்ளது. பெரும்பான்மை இனத்தவர்கள் கூறுகின்ற அனைத்து விடயங்களுக்கும் தலையாட்டிப் பொம்மைகளாக தலையாட்டிக்கொண்டு தமிழ் மக்கள் வாழ வேண்டுமென அரசு எதிர்பார்க்கின்றதென வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த அரச சார்பற்ற அமைப்பின் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் நாம் எமது ஒவ்வொரு தேவைகளையும் போராடிப் பெறவேண்டிய சூழ்நிலையிலேயே இன்று இருக்கின்றோம். தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி இருக்கவேண்டும் இல்லையேல் அவர்கள் அனைவரையும் அண்டை நாடுகளுக்கு துரத்திவிடவேண்டும் என பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூச்சல் போடுகின்றார்கள் சிலர். அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஆனால் தற்செயலாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஏதோ கூறிவிட்டார் என்பதற்காக அமைச்சுப் பதவிகள் பறிப்பு, குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் என அனைவரும் இணைந்து கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

இந்த நிலைகள் தொடரக்கூடாது! நாங்களும் இந் நாட்டின் இறைமையுள்ள குடிமக்களாக எமது பிரதேசங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய முறையில் வாழ வழியிடப்பட வேண்டும்எனக் கோரினால் நாங்கள் பிரிவினை கோருகின்றோம் என ஒப்பாரி வைக்கின்றார்கள். தொடர்ச்சியான இவர்களின் அழுத்தங்கள் ஒருநாள் ஓய்வுக்கு வரும். அதுவரை எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments