இளம் சமூகத்தை மீட்கும் பணி தமிழ் மக்களிடமே:முதலமைச்சர்!

அழிவுப் பாதையில் பயணிக்கின்ற இளைய சமூகத்தை மீட்டெடுத்து சரியான பாதையில் செல்ல வழிகாட்டுகின்ற பாரிய பொறுப்பு அந்தந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களினதும் வாலிபர்களினதும் பொறுப்பாகும். இந்தக் கடமைகள் தள்ளி வைக்கப்படமுடியாதவை. விரைந்து செயற்படுத்தப்பட வேண்டியவை. நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் பல இளைஞர்களை நல்வழிகளிலிருந்து விலக்கி கெட்ட பாதைகளில் அவர்கள் செல்வதற்கு சில சக்திகள் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றனவென வடக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்..

கிராமப் பகுதிகளில் இவ்வாறான சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிப்படுத்துங்கள். போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்யப்பாடுபடுங்கள். இளைஞர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குங்கள். இலத்திரனியல் சாதனங்களில் மட்டமான செய்திகளையும் சித்தரிப்புக்களையும்பார்த்து இன்புறுவதற்கு பதிலாக நல்ல கருத்தாளம் மிக்க உரைகள்,உலகின் அபிவிருத்தி, நவீன கண்டுபிடிப்புக்கள்,இசைக் கலை விருத்தி ஆகியவற்றில் ஈடுபடச் செய்யுங்கள்.அவர்களை மனிதாபிமானம் நிறைந்த நல்ல மனிதர்களாக சமூகங்களுக்கிடையே உலாவர நடவடிக்கை எடுக்கவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். 

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 62வது ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றிருந்த நிலையில் முதலமைச்சர் அங்கு கலந்து கொண்டிருந்தார்.

அவர் தனது உரையில் சனசமுக நிலையத்தின் செயற்பாடுகளுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதனால் பல அத்தியாவசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருந்துள்ளது. உதாரணமாக உதயநகர் கிராமத்துக்கு  குடிநீர் வழங்கப்பட்டு 60 குடும்பங்கள் பயன் அடைந்து வருகின்றன. மேலும் வீதிப் புனரமைப்பு, இலவசக் கல்விகள், விளையாட்டு துறையை மேம்படுத்தல், மர நடுகைத்திட்டம் போன்ற பல திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருந்தமை வெளிநாட்டு உறவுகள் தொடர்ச்சியாக பல உதவிகளை வழங்கி வருகின்ற காரணத்தினாலேயே எனலாம். இவ்வாறான வெளிநாட்டு – உள்நாட்டு தமிழ் மக்களின் ஒத்துழைப்புதான் எம்மை வாழ விடப் போகின்றது. அரசாங்கம் ஒவ்வொரு செயற்றிட்டத்திலும் தனக்கு என்ன இலாபம் கிடைக்குமென்றே பார்க்கின்றது. அதாவது வடக்கில் செயற்றிட்டம் அமைந்தால் தெற்கு என்ன விதத்தில் நன்மை அடையும் என்ற சிந்தனை அவர்களுக்கிருப்பதை நான் உன்னிக் கவனித்துள்ளேன். அவ்வாறான சிந்தனைகள் எமது வெளிநாட்டு உறவுகளுக்கு இருக்காது என்பதே எனது கருத்து.  

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தில் இன்னோர் சிறப்பம்சத்தைக் காண்கின்றேன்.இச் சனசமுக நிலையத்தின் அங்கத்தவர் ஒருவர் தற்செயலாக இறந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு 15,000 ரூபா உடனடியாக வழங்கப்படும் எனவும் இது மீளச் செலுத்தப்பட வேண்டாத ஒரு உதவு தொகையாகவே கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் இங்குள்ள ஏழை மக்களுக்குப் பெரிதும் உதவுவன. 

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அப்போதிருந்த கல்விமான்களின் சிந்தனையில் உருவான ஒரு திட்டமே இந்த சனசமூக நிலைய அமைப்பு ஆகும். ஒவ்வொரு கிராமங்களிலும் அல்லது நகரங்களிலும் வாழும்பலதரப்பட்ட சமூகங்களையும் ஒன்றிணைத்து அக்கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சிப் பாதைக்கு வலுவூட்டுகின்ற ஒரு அமைப்பாகவே கிராம முன்னேற்றச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. 
இவ்வாறு உருவாக்கப்பட்ட சனசமூக நிலையங்களில் நகரப்புற பகுதிகளில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையங்களைவிட கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட சனசமூக நிலையங்கள் நீண்டகாலம் தமது பணிகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று இன்று அக் கிராமங்கள் அல்லது சமூகங்கள் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

அக்காலத்தில் சனசமூன நிலையங்களை அமைப்பதற்கு அக் கிராமத்தில் அல்லது அப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு ஒரு வாரத்திற்கோ அல்லது 10 நாட்களுக்கோ ஏதாவது வேலைகளுக்குச் சென்று அதில் கிடைத்த ஊதியங்களைக் கொண்டு சிறிய ஒரு கொட்டிலை அமைத்து அதில் சனசமூக நிலையங்களை ஆரம்பித்தார்கள். 

இன்று பல சனசமூக நிலைய உறுப்பினர்கள்எமது அலுவலகத்தை நாடி வருகின்றார்கள். தங்களுக்கு கதிரைகள் தேவை, மேசைகள் தேவை, கட்டடங்கள் தேவை, விளையாட்டு உபகரணங்கள் தேவை எனப் பலதரப்பட்ட தேவைப்பாடுகளுடன் எம்மிடம் வருகின்றார்கள். கிராம மக்கள் பலர் தாமாக ஒன்று சேர்ந்து ஒரு சிறிய அபிவிருத்தியைக்கூட செய்வதற்கு முன்வருவதில்லை என்ற ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றது. எல்லாத் தேவைகளுக்கும் நாம் அரசின் கையை எதிர்பார்க்கத் தொடங்கினால் எமது அபிவிருத்திகள் மட்டுப்படுத்தப்படுவன. எனவே எமது மக்களின் நலன்சார்ந்த நல்ல பல திட்டங்களை,மிகப் பெரிய பணச்செலவுகள் இன்றி குறைந்த நிதியுடன் நிறைவேற்றக்கூடிய கல்வி அறிவு மேம்பாடு,வாசிப்புத் திறனை விருத்தி செய்தல்,கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்துதல், பௌர்ணமி விழாக்களை நடாத்துதல் போன்ற இன்னோரன்ன நிகழ்வுகளை நாங்கள் நாமாகவே நடாத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். பாரிய செயற்றிட்டங்களுக்கு மாற்றார் கைகளை எதிர்பார்க்கலாம்.

சனசமூக நிலையங்களில் அறநெறி கற்கைநெறிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இறைபக்தி சற்று குறைவாகவே காணப்படுகின்றது. ஒரு விதத்தில்எமது அறநெறிசார்ந்த வழிகாட்டல்கள் போதுமானதாக இல்லை என்பதைஇது வெளிக்கொணர்கின்றது. எனவே எமது இளைய சமூகத்தை அறநெறிப் பாதையிலும் இட்டுச் செல்ல வேண்டியது இச் சனசமூக நிலையங்களின் பாரிய பொறுப்புக்களில் ஒன்றாகக் கருதப்படலாம். கட்டளையிட்டு அறநெறிப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தீர்கள் ஆனால் அது இளைஞர், யுவதிகள் எமது சமயத்தை வெறுக்கச் செய்யும். அன்புடன், பண்புடன் பழகி, இறைமனிதர்களின் கதைகளைச் சொல்லிப் பாருங்கள் அவர்கள் தாமாகவே ஈடுபாடு காட்டுவார்கள். சடங்குகள் ஒவ்வொன்றிற்குமான காரணங்களை அறிந்து அவர்களுடன் அவற்றைப் பற்றிப் பங்கிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் அறநெறிப் பாடங்களில் ஆசை கொள்வார்கள். ஆர்வம் காட்டுவார்கள். 

தற்போது சமூகங்களுக்கிடையே வன்முறைக் கலாச்சாரம்,போதைப் பொருள்ப் பாவனை,களவு முயற்சிகள், பாலியல் குற்றங்கள் எனப் பலதரப்பட்ட சமூக எதிர்மறை நிகழ்வுகள் அதிகரித்துவருவது கவலைக்குரியது. இவ்வாறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து எமது பிள்ளைகளைப்பாதுகாக்க வேண்டியது அவ்வந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களினதும் வாலிபர்களினதும் தலையாய கடமையாகும். 

ஒரு சமூகத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட வகுதியினரை அல்லது இளைஞர்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதென்பது மிக இலகுவான ஒரு காரியம். அவர்களை அவர்களின் வயது,உடல் இச்சைகளுக்கேற்ப சில தூண்டல் விளைவுகளை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் பல தீய காரியங்களை முன்னெடுக்க வைப்பதுசுலபம். இவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏதாவது ஒருதீய சக்தி எமது பகுதிகளில் செயற்பட்டு வருகின்றதோ என்பதை நான் அறியேன்.ஆனால்இவ்வாறான தீய சக்திகளிடமிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாத்து அவர்களை சரியான தடத்தில் செல்ல வைப்பதென்பது ஓர் இரு நாட்களில் நிறைவேற்றப்படக்கூடிய  விடயமாக கொள்ளப்படக் கூடாது. மாறாக இவர்களை மீண்டும் சுமூக நிலைக்குக்கொண்டுவருவதற்கு நாம் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். இளைஞர்கள் தான் இளைஞர்களை இன்றைய காலகட்டத்தில் கட்டுப்படுத்த முடியும். வயது வந்தோரின் கருத்துக்களை அசட்டை செய்வது இந்த நவீன யுகத்தின் காலத்தின் கோலம். வயது வந்தவர்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களாய்ப்பார்த்து இழி செயல்களை ஒழிக்க முன் வந்தால்த்தான் இவற்றை நாம் கட்டுப்படுத்த முடியுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments