500 நாட்களாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாரிய போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) 500 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து இராணுவத்தின் கையில் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை 10 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட்ச்செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.



“சர்வதேசமே எமக்கு பதில்கூறு ,அரசே நாம் உனது கைகளில் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே ?, விசாரணை என்று எம்மை ஏமாற்றாதே ,தமிழ் பிரதிநிதிகளே வாயடைத்துள்ளீர்களா ?, எங்கே எமது உறவுகள் ?சர்வதேசமே கண்ணை திற ,பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர்களின் கதி என்ன ?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு மேலதிக பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


இன்று மாலை 2 மணிவரை போராட்டம் இடம்பெற்றதோடு தொடர் போராட்டத்தை இன்றுடன் நிறுத்தி மாதாந்தம் ஒவ்வொரு 30ஆம் திகதிகளிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சர்வதேசத்தூடாக தமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இன்றுடன் தொடர் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதால் போராட்டத்தை தாம் கைவிட்டுவிட்டதாக அரசு எண்ணக்கூடாது எனவும் போராட்ட வடிவத்தை மாற்றி தாம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதிகளில் பாரியபோராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்.




No comments