மண்டைதீவும் கடற்படையிடம் பறிபோகின்றது!



யாழ்.நகரில் அருகாகவுள்ள மண்டைதீவில் கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ள பொதுமக்கள் காணிகள் தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்.நகருக்கான துணைநகரத்தை மண்டைதீவில் உருவாக்க தாம் திட்டமிடுவதாக அரசு கூறிக்கொண்டு மறுபுறம் பாரிய கடற்படை தளத்திற்கான நில சுவீகரிப்பினை முடுக்கிவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த காலப்பகுதியில் இப் பகுதியில் பொதுமக்களது வீடுகளையும், கிணறுகளையும் தன்வசம் எடுத்துக்கொண்டது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இப்பகுதியில் குடியமர மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 29க்கும் மேற்பட்ட குடியிருப்புக் காணிகளையும், வளம் நிறைந்த வயல் காணிகளையும் தோட்ட நிலைங்களையும் கொண்ட 18 ஏக்கரைக் கொண்ட இப்பகுதியே மண்டைதீவில் நல்ல தண்ணீரைக் கொண்ட பகுதியுமாகும். 
ஒருபுறம் நல்ல தண்ணீர் கிணறுகளை ஆக்கிரமித்திருக்க அப்பகுதி மக்களோ மண்கும்பானில் இருந்து குழாய் வழியாக வரும் குடிநீருக்காக காத்துக்கிடக்கின்றார்கள். இப்பகுதி விடுவிக்கப்பட்டால் மண்டைதீவு மக்களின் மிகப் பாரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை நிறைவுக்கு வந்துவிடுமென சொல்லப்படுகின்றது.


அது மட்டுமல்லாமல் சோழகக்காற்றுக் காலங்களில் மண்டைதீவின் ஒதுக்குப் பகுதியாகவுள்ள கடற்படையினரின் வேலுசுமண கடற்படை முகாம் அமைந்துள்ள கடற்பகுதியிலேயே மீனவர்கள் தமது பெரிய படகுகளை நங்கூரமிட்டு வந்ததாக அப்பகுதி மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு பெரிய காற்று வீசினாலும் அவர்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. 

தமது சொந்த நிலங்களில் கடற்படையினர் சுகமாக வாழ இம்,மக்கள் யாழ் நகரில் வாடகை வீடுகளிலும், சொந்த ஊரில் இன்னொருவரின் காணியில் ஓலைக்குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தினைக் கூட கடற்படையினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு தாம் இடமளிக்கமாட்டோம். எமது வாழ்விடங்களை விட்டு கடற்படையினர் நிரந்தரமாக வெளியேற வேண்டுமென போராடிவருகின்றனர்.

எனினும் மக்களது எதிர்ப்பினை தாண்டி மண்டைதீவில் காணிகளை சுவீகரிப்பதில் கடற்படை தொடர்ந்தும் முனைப்பு காட்டிவருகின்றது. 

No comments