இனவாதத்தின் பிறப்பிடம் சிங்களம் இதன் உச்ச வடிவமே இனவழிப்பு! - பனங்காட்டான்

தமிழரின் தோலில் செருப்புத் தைத்துப்போட 1956ல் ஆசைப்பட்ட கே.எம்.பி.ராஜரட்ண என்ற எம்.பியும், தமிழரை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்ச்p அடைவர் என்று 1983ல் கூறிய முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், நான் எனது மக்களின் (சிங்களவர்) பாதுகாவலன் என்று 2015ல் பகிரங்கமாகக் கூறிய மகிந்த ராஜபக்சவும் அவ்வப்போது இனவாதம் என்ற கொடிய விசத்தை கக்கியவாறு தமிழின அழிப்புக்குத் தூபமிட்டனர்.  

கடந்த சில நாட்களாக இலங்கையர் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக இனவாதம் என்பது அமைந்துள்ளது.

இதனைச் சொன்னவர்கள் சிங்களவர்கள். தமிழர்களை இனவாதிகள் என்றும், தமிழ் - சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குலைக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும் தமிழர்கள்மீது குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை மையப்படுத்தி, அவர்மீது ஆட்காட்டி விரலை நீட்டி இந்தக் குற்றப்பத்திரம் வாசிக்கப்படுகிறது.

உண்மையான ஒரு கள்வன் மற்றவர்களைக் காட்டி கள்வன் என்று சொல்வானாம். இவ்வாறு கூறுவதன் மூலம் தன்னைக் கள்வனல்ல என்று நிரூபிக்க முயல்வதே அடிப்படை.

சிங்கள் அரசியல்வாதிகள் தமிழர் தரப்பைப் பார்த்து இனவாதிகள் என்று விளிப்பது இவ்வகையானதே.

இனப்பாகுபாடு, இன ஒதுக்கல், இனரீதியான தாக்குதல், இனரீதியான சொத்தழிப்பு, இனப்படுகொலை, இனவழிப்பு என்று பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியது இனவாதம் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் கல்லோயா குடியேற்றத் திட்டத்திலிருந்து சிங்கள தேசத்தில் இனவாதச் செயற்பாடு தமிழருக்கு எதிராக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க முதல் இன்றைய மைத்திரி – ரணில் கூட்டரசு வரை சகல சிங்கள ஆட்சியாளர்கள் காலங்களிலும் இந்த இனவாதம் நீண்டு வளர்ந்து வியாபித்தவாறுள்ளது.

தமிழர்களுக்கெதிராக 1956, 1958, 1977, 1983, 2009ம் ஆண்டுகள் ஈறாக சிங்களத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் வரலாற்றுப் பதிவிலுள்ளன.

இதற்கப்பால் எந்தெந்தக் காலகட்டங்களில் சிங்கள் பௌத்த ஏகாதிபத்தியம் பகிரங்கமாக இனவாதம் என்ற நச்சுத்திரவத்தை கக்கி வந்ததென்பது இன்னொரு பக்க வரலாறு.

1956ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் வெலிமட எம்.பி.யாகவிருந்தவர் கே.எம்.பி.ராஜரட்ண என்பவர். இவரது மனைவி குசுமா ராஜரட்ண ஊவா பரணகம எம்.பி.யாக இருந்தவர்.

சிங்கள பௌத்த தேசியவாதியெனவும், கடைந்தெடுத்த தமிழின விரோதியெனவும் பெயர் கொண்ட கே.எம்.பி.ராஜரட்ண ஒருதடவை உரையாற்றுகையில், தமிழர்களின் தோலில் தான் செருப்புத் தைத்து அணிய விரும்புவதாக கூறியவரென்றால், இவரை தமிழின அழிப்பின் பிதாமகர் என்று கூறுவது தவறாக இருக்க முடியாது.

இவருக்கு ஒலிபரப்பு – தகவல் உதவி அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தது அன்றைய சிங்கள அரசு.

பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் என்ற மசோதாவைக் கொண்டுவர முழுமுதற் காரணமாக இருந்தவர் இவர்.

அதே 1956 ஜுன் 5ம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் தமிழரசுக் கட்சியினர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழுரிமை கேட்டு சத்தியாக்கிரகம் மேற்கொண்ட வேளை, சிங்களக் காடையர் கூட்டத்துக்கு தலைமை தாங்கிச் சென்று சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்தியவரும் இதே ராஜரட்ணதான்.

இவருக்கு பிற்காலத்தில் செனட்டர் பதவியும் வழங்கி அரசாங்கம் மதிப்பளித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவரது மனைவியான குசுமா ராஜரட்ண தமது கணவரிலும் மேலான சிங்கள பௌத்த மேலாதிக்கவாதி. 1965ல் டட்லி சேனநாயக்க அரசில் உள்நாட்டு விவகார உதவியமைச்சராகவிருந்த குசுமா, தமிழுக்கு நிர்வாக மொழி அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பிரதமர் டட்லி கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து தமது பதவியைத் துறந்தவர் என்றால் இவர் தமிழர்களை எவ்வாறு இனத்துவேசமாக நடத்தினாரென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை வெட்டுவதற்காக தரப்படுத்தல் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இது இனவாதத்தின் இன்னொரு வடிவம்.

புள்ளிகள் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் கூடுதலாக பல்கலைக்கழக அனுமதியைத் தடுக்கவென அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் நடைமுறையை இனஒதுக்கல் என்றும் சொல்லலாம்.

தமிழ் இளைஞர்களை போராட்டத்துக்குத் தூண்டிய காரணிகளில் இது முக்கியமானதுங்கூட.

1977ல் பிரதமராகப் பதவிக்கு வந்து, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாக தம்மைத் தாமே நியமனம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்ன செய்தார்?

1983 ஜுலை 11ம் திகதி டெய்லி ரெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில், “தமிழர்களை நான் பட்டினி போடுவேன் என்றால் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் (ஐக ஐ ளவயசஎந வாந வுயஅடைள ழரவஇ வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hயிpல) என்று சொல்லவில்லையா?

நாடு முழுவதுக்குமான ஜனாதிபதியாகத் தெரிவான ஒருவர், சிங்களவர் தனது இனத்தவர் என்ற மமதையில் தமிழரைப் பட்டினி போட்டு காய வைக்கலாமென்று நினைத்துள்ளாரென்றால், இதுவும்  இனவாதமே!

1983 ஜுலை 24ல் தென்னிலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு, சொத்துகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு ஜே.ஆர். இப்படிச் சொன்னார்:

“நான் நினைத்தால் முழுத்தமிழரையும் என்னால் அழிக்க முடியும். ஆனால் நான் அப்படி இன்னமும் நினைக்கவில்லை”

இவ்வாறு அவர் சொன்னபோது அந்தத் தமிழ் அரசியல்வாதி, “உங்கள் மனதிலுள்ள அந்த எண்ணம் எப்போது செயல்வடிவம் பெறும் என்பது தெரியாத நிலையில் உங்கள் அருகே எவ்வாறு அச்சமின்றி இருக்க முடியும்” என்று பளிச்சென பதிலளித்தது பலரும் அறிந்தது.

இங்கு தெரிவது ஜே.ஆரின் இனவாதச் சிந்தனையே.

யாழ்ப்பாணப் பொதுநூலகத்தை தீயிட்டுப் பொசுக்க உத்தரவிட்டு, அது பற்றி எரியும்போது பார்த்து ரசித்த ஜெயவர்த்தனவின் அமைச்சர்களான சிறில் மத்தியுவும், காமினி திசநாயக்கவும் இனவாதிகள் இல்லையா?

ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது மருமகனான இராணுவத் தளபதி வீரதுங்கவை எதற்காக யாழ்ப்பாணம் அனுப்பினார். மூன்று மாதத்துள் பயங்கரவாதத்தை முடித்துக்கட்ட அங்கு சென்ற வீரதுங்க அப்பாவி தமிழ் இளைஞர்களை அவர்களின் சொந்த மண்ணில் வைத்தே படுகொலை செய்தது இனவாதம்தானே.

பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த தமது மாமனார் அனுரத்த ரத்வத்தையை சந்திரிகா குமாரதுங்க யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய வேளை, அவர் அங்கு மேற்கொண்ட தாக்குதல்களை இனவழிப்பு இல்லையென்று கூற முடியுமா?

2015ல் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, “நான் எனது மக்களின் பாதுகாவலன்” என்று அழுத்தி அடித்துக் கூறினாரல்லவா? எனது மக்கள் என்று அவர் சொன்னது சிங்கள மக்களை என்றால் தமிழர்களை என்னவும் செய்யலாம் என்ற அவரது மனவோட்டம் இனவாதம் தானே.

மாவிலாறிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான தாக்குதலில் தமிழர்களை வகைதொகையின்றி கொலை செய்வதற்கு மகிந்தவின் ஷஎனது மக்கள்| சிந்தனையே காரணம்.

தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இன்றைய கூட்டாட்சி, தமிழர்களின் அடிப்படை உரிமை விடயத்தில் எதனையாவது நிறைவேற்றியுள்ளதா?

இதனை எவராவது தட்டிக் கேட்டால் அவர்களுக்குச் சூட்டப்படும் பெயர் இனவாதிகள்.

தென்னிலங்கைச் சிங்களவர்களின் சிம்ம சொப்பனமாக இன்று திகழ்பவர் வடமாகாண முதலமைச்சரே.

தமிழ் மக்களின் இழந்த, பறிக்கப்பட்ட, மறுக்கப்படும் உரிமைகளை நாளும் பொழுதுமு அவர் கேட்டு வருவதே இதற்குக் காரணம்.

உரிமைகளைக் கேட்பதை இனவாத முலாம்பூசி திசை திருப்பப் பார்க்கிறது சிங்கள அரசு.

சிங்களத்தின் இனவாதப் புலம்பல் தொடர்பான ஊடகமொன்றின் கேள்விக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதிலுடன் இப்பத்தியை நிறைவு செய்வது பொருத்தமாகவிருக்கும்.

அவரது பதில் இதுதான்:

“தமிழ்த் தேசத்துடைய உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகின்ற ஒவ்வொரு தமிழ்த் தலைவர்களையும் தெற்கில் இருக்கிறவர்கள் இனவாதியாகத்தான் பார்ப்பார்கள். ஆரம்பத்தில் என்னுடைய பேரனார் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைக்க அவரை  இனவாதியாகப் பார்த்தனர். தந்தை செல்வநாயகம் தமிழ் மக்களின் தலைவராக தன்னை வளர்த்துக் கொள்ள அவரையும் இனவாதியாகப் பார்த்தனர். தேசியத் தலைவர் பிரபாகரனையும் ஓர் இனவாதியாகப் பார்த்தனர். இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை இனவாதியாகப் பார்க்கிறார்கள். அதேபோன்று எங்களையும் இனவாதிகளாகவே பார்க்கின்றனர்...

ஆனால் கூட்டமைப்பை அவ்வாறு பார்க்கவில்லை. தமிழ் மக்களுடைய உரிமைக்காக உறுதியாக இருக்கக்கூடிய தரப்புகளை இனவாதிகளாகப் பார்ப்பது அவர்கள் வழமை. அவ்வாறு எங்களை இனவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று கொச்சைப்படுத்தி எங்களுடன் பேசத் தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்குவதே அவர்களுடைய நோக்கம்” என்பது கஜேந்திரகுமாரின் பதில்.

இதுவே உண்மையான உண்மை.

No comments