நாவற்குழியில் 4கோடியில் சிவன் ஆலயம்!


சிங்கள திட்டமிட்ட குடியேற்றங்காரணமாக பறிபோகின்ற யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் சிவன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.

அவுஸ்திரேலியா சிட்னியில் வாழும் இதய வைத்திய நிபுணர் மனமோகன், சிவகௌரி தம்பதியரின் உபயமாகக் கிடைத்த காணியில் அவர்களின் உபயமாக அமைக்கப்பட்ட கோவில் உயர்ந்து நிற்கிறது. கோவிலில் மூலவராகத் தட்சணாமூர்த்தி, அவர் முன்னால் நந்தியெம் பெருமான் அதற்கும் முன்னால் கற்றேர் அதில் சிவலிங்கத்துடன் மணிவாசகர் என அரண்மனை அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் மனிதவலுவினால் உளிகொண்டு செதுக்கப்பட்டுள்ளனவென விரிவுரையாளர் லலீசன் தெரிவித்துள்ளார். 

ஈழத்து இந்து சமய வளர்ச்சியில் நாவற்குழி மண் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய பூமியாகும். சுவாமி விவேகாநந்தர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது அவரை நாவற்குழியில் இருந்து பெரும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களாம். அவர் அங்கிருந்து குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் பவனியாக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டார் என்கின்றனர். யாழ்ப்பாணத்தவரின் உணவுக்களஞ்சியமும் நாவற்குழியிலேயே அமைந்திருந்தது. போர்ச் சூழலில் இதன் அருமை பலராலும் உணரப்பட்டிருந்தது. இந்த உணவுக் களஞ்சியத்திற்கு முன்பாகவே கோவில் வளாகம் அமைந்துள்ளது.

இதனிடையே செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் சொற்பொழிவு ஒன்றிற்காக மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை சென்றபோதே இக்கரு உதயமானது. திருமந்திரமும் திருவாகசமும் என்ற பொருளில் அவர் உரையாற்றியபோது அங்கிருந்த ஒரு சித்தர் திருமுருகனாரை ஆசீர்வதித்து “திருவாசகத்தை யாழ்ப்பாணத்தில் நீ காப்பாற்றுவாய். காற்று மழை நெருப்பு என எவையும் தீண்டாத வண்ணம் அதைப் பாதுகாக்கக் கூடிய பணியை மேற்கொள்ளக்கடவாய்” என்றாராம். 
டிஜிற்றல் யுகத்தில் திருவாகசத்தைக் காப்பாற்ற இணையம் உள்ளதுதானே எனப்பலரும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் எக்காலத்திலும் அழியாத ஒரு வடிவில் திருவாசகத்தைப் பேணும் முயற்சியாக திருவாசக அரண்மனை அமைக்கும் ஆணை மறைபொருளாக அந்தச் சித்தராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பலநற்பணிகளை இன்று எம்மண்ணில் முன்னெடுக்கும் சிவபூமி அறக்கட்டளையின் வாயிலாக இப்பணி நடந்தேறியுள்ளதாக தெரியவருகின்றது.

சோழர் காலக்கட்டடக் கலைக்கு ஒப்பாக தஞ்சைப் பெருங்கோவிலை நினைவுறுத்தும் வகையில் முப்பது அடி உயரத்தில் விமானம் நிமிர்ந்து நிற்கின்றது. அதில் சிவலிங்கங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மூலவராக தட்சணாமூர்த்தி காணப்படுகின்றார். இலங்கையில் கருவறையில் தட்சணாமூர்த்தி குடிகொள்ளும் முதற்கோவிலும் இதுதான். கருங்கல்லில் நான்கரை அடி உயரமுள்ளவராக இந்த ஞானகாரகன் விளங்குகின்றார். 

விமானத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்ட கோவிற்சிறப்பும் இங்குள்ள தனித்துவங்களில் ஒன்று எனலாம். ஊரெழு சண்முகநாதனின் கைவண்ணமும் தென்னிந்தியச் சிற்பக் கலைஞர் புருசேத்தமனின் கலைவண்ணமும் திருமுருகனாரின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளன. இதைவிட நல்லுள்ளம் படைத்த சான்றோர் பலர் நிதி வழங்கி இக்காரியம் செயற்பட உதவியுள்ளனர். ஏறத்தாழ நானூறு இலட்சம் ரூபா மதிப்பில் பணிகள் இடம்பெற்றதாக மதிப்பிட முடிகின்றது.

கோவிலின் உட்பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்களில் அறுநூற்று ஐம்பத்தாறு திருவாசகப் பாடல்களும் கருங்கற்களில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. பாரதிபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞரான வினோத் என்ற கலைஞர் இந்த வரலாற்றுப் பணியைச் செய்துள்ளார். புகழுடற் சின்னங்களில் தம்கைவினையை வெளிப்படுத்திய தேர்ச்சி மிக்கவர். இன்று பக்திசார்ந்த வரலாற்றுப் பணியை மேற்கொண்டு பெருமை பெற்றுள்ளார். இதைவிடக் கிழக்கு மற்றும் மேற்குப் புற உட்பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் 108 மணிகளும் காணப்படுகின்றன. அடியவர்கள் தங்கள் விருப்பப்படி அபிஷேகித்து ஆனந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

இதைவிட வாயிலில் சிவபுராணத்தை கிரந்தம், சீனம், தங்கோலோ, சிங்களம் முதலிய பன்னிரண்டு மொழிகளில் மொழிபெயர்த்து முப்பது அடி நீளச்சுவரில் அமைத்துள்ளனர். கோவிலில் எவ்வேளையும் திருவாசகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிப்பொறிமுறையையும் ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையம், யாத்திரிகர் தங்கும் அறை, பூசகர் அறை, களஞ்சிய சாலை, பாகசாலை எனக் கோவிலுக்குரிய இதர அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


2009 யுத்த முடிவின் பின்னர் திட்டமிட்ட வகையில் சிங்கள குடும்பங்கள் ஆக்கிரமிப்பிற்கு நாவற்குழி உள்ளாகியிருப்பதுடன் விகாரை அமைப்பு பணியும் நீதிமன்ற தடையினை தாண்டி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதே நாவற்குழியில் சிவன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்பை பெற்றுள்ளது.

No comments