சிறையில் காவி களைய மறுக்கும் ஞானசார தேரர்


வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தியா எக்னெலிகொடவை, நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு நேற்றுமுன்தினம்,  ஆறு மாதங்கள் அனுபவிக்கும் வகையில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை ஹோமகம நீதிமன்றம்  வழங்கியது.

இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையை ஞானசார தேரர் அணியவில்லை. தொடர்ந்தும் அவர் காவி உடையுடனேயே இருந்து வருகிறார்.

அவர் சிறைக் கைதிகள் அணியும், அரைக்காற்சட்டையை அணிவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறைச்சாலையில் நேற்று ஞானசார தேரரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அவரை மருத்துவர் ஒருவர் பரிசோதித்து, பாதத்தில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்.

ஞானசார தேரருடன், 14 சிறைக்கைதிகள் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ஞானசார தேரர் சிறைச்சாலையில், காவி உடையை அணிவதற்கு அனுமதி அளிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, ஹோமகம நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, ஞானசார தேரரின் சட்டவாளர்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments