மன்னார் மனித எலும்பு அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாக மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது.

இந்த நிலையில் இன்று மதியம் குறித்த அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு,மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (18) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ அகழ்வு பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் நகர் பகுதியில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (14) வியாழக்கிழமை 14 ஆவது நாளாகவும் இடம் பெற்றது.

-மன்னார் நீதவான் முன்னிலையில்,எனது தலைமையில் இடம் பெற்ற அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை (14) மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்டது.மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி பணிகள் தொடர இருக்கின்றது. கடந்த 14 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது பல்வேறு மனித எலும்புகள் மீட்கப்பட்டதோடு தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

-தற்போது வரை மனித எலும்புகள்,மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ள போதும் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கருத்த கூற முடியாது.முழுமை பெற்றதன் பின்பே தெரிவிக்க முடியும். -தொடர்ச்சியாக இடம் பெற்ற அகழ்வு பணிகளின் போது குறித்த விற்பனை நிலைய வளாகம் கடல் பகுதியை சார்ந்தமையினால் குறித்த வளாகத்தில் இருந்து கடல் மட்டத்திற்கு கீழும்,கடல் மட்டத்திற்கு மேல் பகுதியிலும் இரு பிரிவுகளாக மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட மனித எலும்புகளின் மாதிரியின் கால நிர்ணயத்தை அளவிடும் காபன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்பு மாதிரிகள் தற்போது மன்னார் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. -தற்போது குறித்த அகழ்வுகளில் இருந்து தடையங்களாக 2 சிறிய மணிகள்,சட்டி,பானை,2 பொலித்தீன் பை,2 மோதிரத்தை ஒத்த பொருட்கள்,3 சிரிய அளவிலான கருத்த நிற பொருட்கள் என்பன அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

-எதிர் வரும் திங்கட்கிழமை(18) வழமை போன்று காலை 7.30 மணிக்கு அகழ்வு பணிகள் இடம் பெறும்.அகழ்வு பணிகள் முழுமை பெற்றதன் பின்னர் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் முழுமையான விபரம் தெரிவிக்கப்படும் என விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

No comments