வடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்?

வடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் நியாயப்படுத்தியுள்ளார்.
இதற்கெதிராக மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு காரசாரமான விவாத மையமாகியிருந்தது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.


எனினும் வடமாகாணசபையின் முதலமைச்சர் இணைத்தலைமையில் கூட்டம் கூடிய போதுமட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்களது பிரசன்னமின்றி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிக்க குவிந்துள்ள தென்னிலங்கை மீனவர்கள் மற்றும் அதனை அனுமதித்துள்ள கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகளது போக்கு என்பவை தொடர்பில் கடுமையான வாதங்கள் நிகழ்ந்திருந்தது.

தமிழர்களை போன்று முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களிற்கும் தொழிலில் ஈடுபட உரித்திருப்பதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் நியாயப்படுத்தியிருந்தார்.அப்போதே மாநகர முதல்வரது படகுகளும் கடலட்டை பிடிக்க வந்துள்ளதாக குற்றஞ்சாட்டி மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருந்தன.

இதனிடையே எதிர்வரும் புதன்கிழமை மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திற்கு மீனவ அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments