ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண்: ஏஜெண்ட்களின் அதிர வைக்கும் பின்னணி

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த 39 வயது பெண் வீட்டுவேலை என்ற பெயரில் பாலியல் அடிமையாக விற்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்கு என்று துபாய் அனுப்பப்பட்ட அப்பெண் ஓமனிலிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்ஸ்டர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜித் சிங் ஆஜூலாவை சந்தித்த பின் ஊடகம் ஒன்றிடம் பேசிய அப்பெண், தன்னைப் போல் 30 க்கும் மேற்பட்ட பஞ்சாப் பெண்கள் ஓமனில் பாலியல் அடிமைகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்டு அப்பெண்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்பெண் வைத்துள்ளார்.

பாலியல் அடிமையாக சிக்கவைக்கப்பட்ட சூழ்நிலையை விளக்கியுள்ள அப்பெண், “கடந்த பிப்ரவரி மாதம் பெரோஸ்பூரில் ராகுல் என்ற ஏஜெண்ட்டை சந்தித்தேன். துபாயில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் வீட்டு வேலை பெற்றுத் தருவதாக சொன்ன அந்த ஏஜெண்ட், என்னிடம் 55 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஏப்ரல் 9 ஆம் தேதி நான் துபாய் சென்ற நிலையில், ஓமனில் உள்ள சேக்கிற்கு விற்கப்பட்டேன். அப்போது, ஏற்கனவே பாலியல் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த பல பஞ்சாப் பெண்கள் அந்த சேக்கின் பிடியில் இருந்தனர்” என அந்த பயங்கரத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

“மே 5 அன்று எப்படியோ அந்த சேக்கின் பிடியிலிருந்து தப்பிய நான், துபாயில் இருந்த இந்திய தூதகரத்திற்கு சென்றேன். அங்கிருந்து எனது கணவரை தொடர்பு கொண்டேன். எனது கணவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜூலாவை அணுகியதை அடுத்து, அவரின் உதவியுடன் இந்தியா திரும்பியுள்ளேன்” என அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த சேக்கின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் விபச்சாரத்தில் மட்டுமின்றி பாலியல் வீடியோக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணை மீட்க உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜூலா, “வேலை வாங்கி தருவதன் பெயரில் பஞ்சாப்பை சேர்ந்த ஏழை பெண்களை ஏமாற்றும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

துபாயில் உள்ள ஏஜென்ட்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு பஞ்சாப்பில் உள்ள ஏஜெண்ட்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பெண்களை துபாய்க்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கும் அப்பெண், ஓமனில் சிக்கியுள்ள பஞ்சாப் பெண்களை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

No comments