மைத்திரியின் வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி - கூட்டமைப்பு வெளியே விக்கி உள்ளே

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணியின் உறுப்பினர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

செயலணியின் உறுப்பினர்களாக 48 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் அரசியல்வாதிகள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
நிதி அமைச்சர் மங்கள சமரவீர,
வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்,
நெடுஞ்சாலைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம்,
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய,
காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க,
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ,
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க,
கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா,
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,
விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம,
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
நீர்ப்பாசன, நீர்வழங்கல், இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க,
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி,
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 28 பேரில் 26 பேர் அரச அதிகாரிகளாகவும், இருவர் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் ஒருவரும் இந்தச் செயலணியில் உள்வாங்கப்படவில்லை.

அதேபோன்று ஆளும் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் செயலணியில் உள்வாங்கப்படவில்லை.

மைத்திரியுடன் பேச்சு நடத்துவார் சம்பந்தன்

இந்தச் செயலணி நியமிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவில்லை.

செயலணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய பின்னரே இது தொடர்பில் தமக்கும் தெரியவந்ததாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்படாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

No comments