உறுப்பினர்கள் நியமிக்காமல் செயலணி ?? - வடக்கு அவையின் தேர்தல் பூச்சாண்டி !!




வடமாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்குமாக  நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அச் செயலணியில் உள்ளடங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் யார்? யார்? என இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் குறித்த செயலணி பற்றிய அறிவிப்பு வழமையான தேர்தல் பூச்சாண்டி விளையாட்டே என்று மக்கள் விசனமடைந்துள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியபோதும் முறைப்பாடுகள் செய்தபோதிலும் எட்டிக்கூடப் பார்த்திருக்காத வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 22 பேர் கடந்த சித்திரை மாதம் 10ம் திகதி நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.



எனினும் அதிகமாக சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் எல்லைக் கிராமங்களுக்குச் சென்றால் நல்லிணக்கம் பாதித்துவிடும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையினை சிரம்மேல் ஏற்று தாங்கள் பயணித்த சொகுசு வாகனங்களில் இருந்து கீழ் இறங்காது முல்லைத்தீவிற்கு இவர்கள் சுற்றுலாவிற்கே வந்தவர்கள் போல நடந்துகொண்டனர். சிங்கள குடியேற்றங்கள் மற்றும் மீன்பிடியால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களைச் சந்திப்பதற்கு முயன்றபோதிலும் தம்மை சந்திக்கவில்லை என அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு  கவலையுடன் தெரிவித்திருந்தனர்.

முல்லைத் தீவில் நூற்றுக்கணக்கில் வாடிகள் அமைத்து ஒரு கிராமமாக பாரிய பிரதேசத்தினை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்திருந்த இடத்தினூக இவர்களின் சொகுசுவாகனத் தொடரணி கடந்தபோது ஒருவரும் கீழே இறங்கவேண்டாம் என தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு கட்டளைத் தளபதி கட்டளையிட்டிருந்தார்.



தற்போது மாகாணசபைத் தேர்தலுக்கான வேலைத்திட்டத்தை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா நடைபெற்று ஒரு மாதங்கள் கடந்த நிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே மேற்படி ஆட்களே நியமிக்கப்படாத செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி 11 பேரினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டள்ள செயலணிக்கு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இணை தலைவராக இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


முல்லைத்தீவுக்கு சென்றிருந்த குறித்த குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் மதிய விருந்து உண்டபின் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக 5 நிமிட போராட்டம் நடத்தியிருந்ததாக ஊடகங்கள் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments