அழிவுகளில் மீண்டெழுந்து வருகின்றோம்:சர்வேஸ்


நாங்கள் ஒரு சாதாரணமான நாட்டிலிருந்து சாதாரண சூழலிலிருந்து இந்த பதவிகளை பெற்றுக்கொள்ள வில்லை பாரிய போர் ஒன்றை சந்தித்து அதன் அழிவுகளைத்தாங்கி அந்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வருகின்றோம். எனவே எங்கள் எல்லோரினதும் கடமை இரட்டிப்பானது. என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்களை வழங்கி வைத்து சிறப்புரையற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்.30 ஆண்டுகள் கொடிய போருக்குப்பின்னரும் நாங்கள் மீண்டெழுகிறோம் என்றால் அது எங்கள் எல்லோரினதும் அயராத உழைப்பு என்றே சொல்ல வேண்டும். இன்று பிரதிக்கல்விப்பணிப்பாளர்களாக பதவியேற்கும் நீங்கள் அனைவரும் எமது மாகாணம் இலங்கையில் கல்வியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஒரு அமைச்சராக நானும் சரி எங்களுடைய அதிகாரிகளும் சரி ஆசிரியர்களும் சரி எங்கள் எல்லோருக்கும் தொடர்ச்சியான பொறுப்புக்கள் இருக்கின்றன அந்த வகையில் உங்களுக்கும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் என்ற வகையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நீங்கள் எந்தளவுக்கு வினைத்திறனாக செய்கின்றீர்களோ அந்தளவுக்கு எங்களுடைய மாகாணத்தை கல்வியில் உயர்த்த முடியும். ஆகவே நீங்கள் அனைவரும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும்.

எங்கள் எல்லோருக்குமே குடும்பங்கள் இருக்கின்றன. எல்லோருக்குமே குடும்பப்பிரச்சினைகள் இருக்கின்றன சொந்தப்பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த சொந்தப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து எங்களுடைய கடமைகளை நாங்கள் மறந்து விடக்கூடாது. சொந்தப்பிரச்சினைகள் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் அவற்றை நாங்கள் எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி ஆலோசிக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நியமனங்களின் அடிப்படையில் நிர்வாக ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு எங்களுடைய அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். விடுதி வசதியோ அல்லது களப்பணியின் போது போக்கு வரத்து வசதியோ எதுவாயினும் அதனை தீர்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதே போல நீங்களும் உங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்ய வெண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது உண்மையில் தனிப்பட்ட கடமையில்லை. ஒரு சமூகக்கடமை.
நாங்கள் ஒரு சாதாரணமான நாட்டிலிருந்து சாதாரண சூழலிலிருந்து இந்த பதவிகளை பெற்றுக்கொள்ள வில்லை பாரிய போர் ஒன்றை சந்தித்து அதன் அழிவுகளைத்தாங்கி அந்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வருகின்றோம். எனவே எங்கள் எல்லேரினது கடமையும் இரட்டிப்பானது. இவ்வாறான ஒரு கால கட்டத்தில் நாங்கள் அனைவரும் எம் சமூகத்திற்காக எமது சமூகத்தின் மீட்சிக்காக பாடுபடவேண்டும். என்றார்.

இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் 20 பேருக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார், கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செலாளர்,நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments