சிறையிலுள்ள கணவனுக்கு கஞ்சா கொடுத்த மனைவிக்குப் பிணை


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கஞ்சா எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.

20 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இருவேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்ட நாள்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் அவரை சந்திப்பதற்காக அவரது மனைவி நேற்று (31) சென்றுள்ளனர். அதன்போது சந்தேகநபருக்கு அவரது மனைவி எடுத்துச் சென்ற வெற்றிலை சரையிலிருந்து 4 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் சோதனையின் மீட்டனர்.

அதனையடுத்து அந்தப் பெண் சிறைக்காவலர்களால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

4 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சந்தேகநபர், பொலிஸாரால் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

"கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை அவரது மனைவியான இந்தப் பெண்ணே பொலிஸாரிடம் தகவல் வழங்கிப் பிடித்துக் கொடுத்தார்.

சிறைச்சாலைக்கு கஞ்சா எடுத்துச் செல்ல அவரது கணவரின் வற்புறுத்தலே காரணம். அத்துடன், இந்தப் பெண் 2 பெண் பிள்ளைகளின் தாயார். இவற்றைக் கருத்திற்கொண்டு பெண்ணை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று பெண் சார்பில் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன், நிகழ்வு - குடும்ப சூழலைக் கருத்திற்கொண்டு பெண்ணை பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, 2 கிலோ கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

No comments