தந்தையை பழிவாங்க மகள் கொலை?


யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா(வயது-06) கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி கொலை அரங்கேற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.கைதாகியுள்ள முக்கிய சந்தேகநபர் 20 வயதேயான இளைஞரெனதெரியவந்துள்ளது.
அவரது கொலை முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட நால்வர் துணை நின்றுள்ளனர்.

தீவிர விசாரணையின் பின் சிறுமியின் சீருடை மறைத்து வைக்கப்பட்டிருந்த பற்றையைப் பகுதியை பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டியுள்ளார். பாடசாலைச் சீருடை மீட்கப்பட்டுள்ளது.


சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை உள்பட நால்வர் பொலிஸார் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

“சந்தேகநபர்கள் கஞ்சா போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்கள் 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்டவர்கள்.

சிவனேஸ்வரன் றெஜீனா பாடசாலை முடித்து திரும்பும் போது, அவரை பிரதான சந்தேகநபர் கடத்திச் சென்று பற்றைக்குள் வைத்து கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். அதற்கு சிறுமியின் சிறிய தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார்.

கொலையை திசை திருப்ப தோடுகளை எடுத்ததுடன், சீருடையையும் களைந்துவிட்டு சடலத்தை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.

இதனிடையே மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுப்புலத்தில் ஆரம்பித்த போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறி சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு கல்லூரிக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments