வங்காலை தோமஸ்புரி படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்!

மன்னாருக்கு தென் கிழக்கே வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்தில் 2006 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை, இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஒரு வீட்டினுள் மிகக் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தினர் தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35 வயது) என்பவரது வீட்டினுள் நுழைந்து, வீட்டுக்காரரின் மனைவி மேரி மெட்டலினை (சித்திரா 27 வயது) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்த பின்னர் பிள்ளைகளான ஆன் லக்ஸிகா (9 வயது) , ஆன் டிலக்ஸன் (7 வயது) மற்றும் தாய், தந்தை ஆகிய நான்கு பேரையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு சென்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் வங்காலை மக்கள் மிகவும் கொந்தளித்து , குற்றவாளிகளைத் தங்களுக்குத் தெரியுமெனவும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் முறையிட்டிருந்தனர்.

இப் பகுதியில் பல மாதங்களாக இது போன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள் தொடர்ந்ததால் தோமஸ்புரி கிராம மக்களில் மிகப்பெரும்பாலானோர் அந்நாட்களில் இரவு நேரங்களில் வங்காலை புனித ஆனாள், தேவாலயத்திற்குச் சென்று தங்கிவிட்டு அதிகாலையில் வீடு திரும்புவது வழமை.

எனினும், படுகொலை நடந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களது உறவினர்களான நான்கு குடும்பங்களும் வேறு ஒரு சில குடும்பங்களும் இரவு நேரத்தில் இடம் பெயராது தங்கள் தங்கள் வீடுகளிலேயே தங்குவார்கள்.

இந்த நிலையில், கொலை நடக்க 2 நாட்களுக்கு முன்பு நான்கு இராணுவத்தினர், கொலை நடை பெற்ற வீட்டை மையமாக வைத்து வந்து அங்கும் அருகிலிருந்த ஒரு சில வீடுகளுக்கும் மட்டும் சென்று அங்கு இருப்போர் பற்றி அறிந்து சென்று அதன் பின் படுகொலை நிகழ்ந்த நாளன்று இந்த கோர நிகழ்வை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர்.

மறு நாள் வெள்ளிக்கிழமை(09-06-2006) காலை ஏழு மணியாகியும் வீட்டிலிருந்த எவரும் வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்த சகோதரி இவர்களது வீட்டுக்குச் சென்று முன் கதவைத் திறந்து பார்த்து கொடூர காட்சியாக கண்டு அலறியுள்ளார்.

இவரது சகோதரி, வீட்டின் வரவேற்பறையில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மேரிமெட்டலின் (சித்திரா 27 வயது) இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அப்பகுதியெங்கும் இரத்தம் உறைந்து போய்க் கிடந்தது. இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஏனையோர் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் கூரான உளிகளால் குத்தி இவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

அத்துடன், இவர் கொலை செய்யப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுமிருந்தன.

இதேநேரம், இவரது கணவரையும் இரு பிள்ளைகளையும் அங்கு தேடியபோது, அருகிலுள்ள அறையொன்றினுள் மூவரதும் சடலங்கள் சுருக்குக் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன.

அறையின் தரையில் பெருமளவு இரத்தம் உறைந்து போயிருந்தது.
மாட்டின் இவரது பிள்ளைகளான ஆன் லக்ஸிகா (9 வயது ) , ஆன் டிலக்ஸன் (7 வயது) ஆகியோரின் சடலங்களே, கயிற்றில் சுருக்கிடப்பட்டு வீட்டுக் கூரையில் தொங்க விடப்பட்டிருந்தன.

இவர்களது உடல்களிலும் பல இடங்களிலும் உளிகளால் மிக ஆழமாக குத்தப்பட்ட பல காயங்கள் காணப்பட்டன.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியெங்கும் காட்டுத்தீபோல பரவவே அங்கு வங்காலைக் கிராமத்தைச் சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியதுடன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டும், கொந்தளித்தும் போயிருந்தனர்.

இது பற்றி அறிந்து அப்போதைய மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரி.ஜே. பிரபாகரன், மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை , மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம், மன்னார் பிரதேச செயலர் திருமதி ஸ்ரான்லி டி. மெல், நானாட்டான் பிரதேச செயலர் என்.திருஞானசம்பந்தர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளென பெருமளவானோர் அங்கு வந்திருந்தனர்.
.
இதன்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும், இராணுவத்தினரே இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் அவர்களைத் தங்களுக்குத் தெரியுமென முழங்கியதோடு வீட்டிற்கு வெளியே பல இடங்களிலும் காணப்பட்ட இராணுவச் சப்பாத்து அடையாளங்களையும் அங்கு கிடந்த இராணுவப் பொருட்கள் சிலவற்றையும் அனைவருக்கும் காண்பித்தனர்.

இதையடுத்து அனைத்து தடயப் பொருட்களையும் சேகரிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்ட பின், சடலங்களை பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறும் பணித்தார்.

இதேநேரம், இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமுற்ற ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அப்பகுதிக்கு பெருமளவு கலகத் தடுப்புப்பொலிஸாரும் இராணுவத்தினரும் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர்.

எங்கும் பெரும் பதற்றம் நிலவிய அதேநேரம், தோமஸ்புரி மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறி வேறிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழின படுகொலைகளுக்கு இன்றளவும் இலங்கை நீதி மன்றத்திலோ சர்வதேசத்திடம் இருந்தோ நீதி கிடைக்கவில்லை என்பதே தமிழர்களின் வரலாறு.

No comments