பணிநீக்கம்: உறவுகளுடனான விளையாட்டு!


ஹற்றன் நஸனல் வங்கியின் இரு ஊழியர்களின் பணிநீக்கம் செய்யப்பட்டமை தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டதென்பதை வங்கி நிர்வாகம் புரிந்துகொள்ளவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் விபரிக்கப்படுகையில் போரின்போது இறந்த தமது உறவுகளுக்காக கடந்த 19.05.2018 அன்று தமிழ் மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுட்டிக்கப்பட்டது.

அன்றைய நாளில் ஹற்றன் நஸனல் வங்கியின் கிளிநொச்சி கிளை அலுவலகத்தில் வைத்து இறந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்தமைக்காக - அந்த வங்கியின் இரண்டு பணியாளர்களை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்தமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்விடயம் தமிழ் மக்களின் உணர்வுகளோடு தொடர்புபட்டதென்பதை வங்கி நிர்வாகம் புரிந்துகொள்ளவேண்டும்.

இறந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்தமைக்காக வங்கி நிர்வாகம் குறித்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து - ஊழியர்களைப் பழிவாங்கியுள்ளது. குறித்த வங்கியின் இந்த செயற்பாடு -தமிழ் மக்களின் மனங்களை மிக ஆழமாகப் புண்படுத்தியுள்ளது.

அத்துடன் - பாதிக்கப்பட்ட இனங்களின் உணர்வுகளைப் புண்படுத்தி - மேலாதிக்க சிந்தனையுடன் -தமிழ் மக்களின் பணத்தைச் சுரண்டும் நோக்கத்தில் தமிழர் பகுதியில் குறித்தவங்கி காலூன்றியுள்ளதா? என்னும் நியாயமான சந்தேகம் எழுகின்றது.

ஜனநாயக ரீதியில் - இறந்த உறவுகளை நினைவுகூர்ந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஹற்றன் நஷனல் வங்கி நிர்வாகம் -மீண்டும் அவர்களை பணியில் இணைத்து - தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலாதிக்க சிந்தனையோடு -பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை தொடர்ந்தும் இந்த வங்கி புறக்கணிக்குமாயின் - பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து - மிகப்பாரிய போராட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோமென அதன் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்ராலின்,தெரிவித்துள்ளார்.

No comments