கறுப்புப் பண விவகாரம்! ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமொிக்கா குற்றப்பத்திரிகை

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கறுப்புப் பண விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) மேற்கொண்ட விசாரணை மற்றும் நீதித்துறை வழங்கிய அனுமதிக்கு அமைய இந்தக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக, உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் இலங்கைத் தூதுவராக இருந்த போது, அளிக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு விலக்கிக்கொண்டதாக அறிவித்ததை அடுத்து, இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஜாலிய விக்ரமசூரியவுக்கு குற்றச்சாட்டை அடுத்து, இராஜதந்திர சிறப்புரிமையை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,வெளிவிவகார அமைச்சு அதனை நீக்கியுள்ளது. தமது இராஜதந்திர சிறப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 29ஆம் திகதி நிராகரித்திருந்தது. எனினும் தற்போது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை இதே விடயத்துக்காக தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்துள்ளது. எவ்வாறெனினும், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு, ஜாலிய விக்ரமசூரியவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments