வடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது தீர்மானம்.விரும்பினால் அதனை தலைகீழாக ஏற்றவேண்டுமாயின் அதனையும் செய்வோம்.சிங்கள அமைச்சர்கள் அதனை பற்றி கவலைப்படவேண்டாமென வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் ஏற்றுமாறு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாக இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார என்பவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பில் தென்னிலங்கை இனவாத அமைப்பொன்று வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனிற்கு எதிராக கொழும்பு காவல்துறையினில் புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அமைச்சரொருவர் கொடி இறக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளாரேயென்ற கேள்விக்கெ அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தெற்கு ஊடகங்கள் சில மீண்டும் இனவாதத்துடன் கருத்துக்களை முன்வைக்க தொடங்கியுள்ளன.அவர்கள் தொடர்புடைய தரப்புக்களுடன் பேசாமல் எழுந்தமானமாக செய்திகளை இனவாத நோக்கில் வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் இலங்கையில் தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த சிங்கள ஜனாதிபதிகளில் கடைசியானவராக மைத்திரி இருக்கட்டுமென தெரிவித்தார்.

போர் வீரர்கள் நினைவு தினத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கள் நிச்சயமாக தமிழ் மக்களது வாக்குகளை பெற்று ஜனாதிபதி கதிரையேறிய ஒருவரது கருத்தாக இருக்கமாட்டாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments