கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!

கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?

இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.

இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.

கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

கனடா அரசு உலகின் பல பாகங்களிலிருந்தும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உதவியுள்ளது. அதற்காக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து , அனைவராலும் நன்கு அறியப்பட்ட யுத்தச்சூழல் நிலவிய நாடுகளிலிருந்து வந்த அகதிகள் விடயத்தில்  சிரியா அகதிகளை ஏற்றுக்கொண்டதைப்போல் , அனைவரையும் அகதியாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கு அவ்விதமான சூழல் நிலவிய காலகட்டத்தில் . ஒவ்வொருவரையும் தனித்தனியாக அகதியென்று நிரூபி என்று கேட்டது சரியானதாகத் தெரியவில்லை. தற்போது , யுத்தம் முடிவடைந்த சூழலில் வருபவர்களை வேண்டுமானால் அவ்விதம் கேட்கலாம். ஆனால் அன்று யுத்தம் கனன்று எரிந்து கொண்டிருந்த சூழலில் வந்தவர்களை அவ்விதமாகக் கேட்டிருக்கத்தேவையில்லை. அக்காலகட்டத்தில் தமிழர் நலன்களைப் பேணுவதாகப் பீற்றிக்கொள்ளும் தமிழர் அமைப்புகள் அரசைத் தம் அரசியல் பலத்தை வைத்து இவ்விதமானதொரு கோரிக்கையினைச் செவிமடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்க வேண்டுமல்லவா? இவ்விதம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைப்பாதுகாப்பதற்குரிய , ஆதரவளிப்பதற்குரிய  செயற்திட்டங்களைச் செயற்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?  இவை இல்லாதபடியால் தானே அண்மையில் 'டொராண்டோவில்' தொடர் கொலையாளியான புரூஸ் மக் ஆர்தரின் கைகளிலகப்பட்டுச் சமூகத்திலிருந்தே ஒதுங்கி, யாராலும் கைவிடப்பட்ட நிலையில், MV Sun Sea கப்பலில்  வந்திறங்கி அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கிருஷ்ண குமார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அகதி மரணமாக வேண்டியேற்பட்டது? இவர் மறைவின் பின்னரே இவரது நிலை அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது. ஒரினச்சேர்க்கையானவரான புரூஸ் மக் ஆர்தர் அவ்விதமானவர்கள் பலரைப்படுகொலை செய்து ,தான் செய்து வந்த  'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளில்  வீட்டுத்தோட்டங்களில் தான் நிறுவிய பூக்கன்றுச் சட்டிகளில் அவர்களின் உடல்களைத் துண்டுகளாக்கி மண்ணோடு மண்ணாகப் புதைத்து மறைத்து வந்திருக்கின்றார். அவ்விதமாகப்படுகொலை செய்யப்பட்டவர்களில் எட்டாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கிருஷ்ணகுமார்  கனகரத்தினம். ஆனால் இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்லர். எவ்விதம் இவர் புரூஸ் மக் ஆர்தரின் கைகளில் அகப்பட்டார் என்று இக்கொலைகளை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவேளை கிருஷ்ணகுமார் கனகரத்தினம் புரூஸ் மக் ஆர்தர் செய்து வந்துகொண்டிருந்த 'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளுக்கு உதவுமொரு தொழிலாளியாக வேலை பார்த்திருக்கக் கூடும். அவரது நிலையை புரூஸ் மக் ஆர்தர் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும். இக்கோணத்திலும் காவல் துறையினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்?

கிருஷ்ணகுமார் கனகரத்தினம் இங்குள்ள தமிழர் அமைப்புகளை, ஊடகங்களை இனியாவது விழிப்புற வைக்க வேண்டும். வாக்குக் கேட்டு உங்களை நாடும் தமிழ் அரசியல்வாதிகள் உங்களிடம் வரும்போது கேளுங்கள்: "அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட மக்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளை இதுவரை எடுத்தீர்கள்?"

கேளுங்கள் மக்களே! கேளுங்கள்! பதில் கூற வேண்டிய தார்மீகக் கடமை இதற்காகவே அரச நிதி பெறும் இவ்வமைப்புகளுக்கு , ஊடகங்களுக்கு உண்டு? இனியாவது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படும் அகதிகள் விடயத்தில் அவர்கள் நலன்களைப்பொறுப்பேற்கும் வகையில் தமது செயற் திட்டங்களை வகுத்துத் தமிழர் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் செயற்படட்டும்.

கிருஷ்ணகுமார் கனகரத்தித்தின் மரணம் பற்றி சிபிசி தொலைக்காட்சி நிலைச் செய்திப்பிரிவால் வெளியிடப்பட்ட செய்தி இது. இதனை அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478

அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.

37 வயதான கனகரத்தினத்தின் இறப்பு, முன்பே திட்டமிடப்பட்டு வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையென (first-degree murder) புரூஸ் மக்ஆதர் மேல் இன்று காலை குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேறு ஏழு ஆண்களின் இறப்புத் தொடர்பாக, இந்தத் தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப்பதாகக் ஏற்கனவே  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்று கொலைகளைச் செய்ததாகக் குற்றங்கள்சுமத்தப்பட்டிருக்கின்றன. 

ரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Mallory Crescentஇல், தரைத் தோற்றத்தை அழகுபடுத்துவராக மக்ஆதர் வேலைசெய்த ஒரு வீட்டுத் தோட்டத்தில், பூக்கன்றுகள் நடும் சட்டியொன்றில் (garden planter) கனகரத்தினத்தின் இறந்த உடலைக் கண்டெடுத்ததாக இந்த வழக்கின் முக்கிய புலன்விசாரணையாளரான Det.-Sgt. Hank Idsinga செய்தியாளர் செய்திமாநாடு ஒன்றில் தெரிவித்தார்.

"அவரைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக உள்ளது," என CBC செய்திகளுக்கு, T. பிரணவன் கூறினார். "இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம் அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம்."

2010 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மாதப் பயணத்தின் பின்னர், தாய்லாந்திலிருந்து B.C. கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த, 492 அடைக்கலம் தேடிய இலங்கையர்களில் இருவராக பிரணவனும் கனகரத்தினமும் இருந்தார்கள்.

அந்தப் பயணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல் காரணமாக அகதி அந்தஸ்தைக் கோரினார்கள், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் அவர்களில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.

கனகரத்தினத்தைத் தான் சந்தித்திருந்ததாக CBC செய்திகளுக்குக் கூறிய, அந்தச் சரக்குக் கப்பலில் வந்திருந்தவர்களின் அகதிக் கோரிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வன்கூவர் குடிவரவுச் சட்டத்தரணிகளில் ஒருவரான Gabriel Chand, கனகரத்தினத்தை "நல்ல மனிதர்," எனப் பல தடவைகள் விபரிக்கிறார், ஆனால் கனகரத்தினத்தின் வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.  

"மென்மையாகப் பேசும் ஒருவராக அவர் இருந்தார்," என்கிறார் அவர். "ஒப்பீட்டளவில் அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார்." MV Sun Sea கப்பலில் பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகத் தான் அனுதாபப்பட்டதாகக் கூறும் Chand, அதேநேரத்தில், கனகரத்தினத்தின் அனுபவத்தைப் பற்றிக் "குறிப்பாகத்" தான் கவலையடைந்ததை நினைவுகொள்கிறார்.

"அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார், அதன்பின்னர் இப்படியொரு முடிவு அவருக்கு வந்திருப்பது மிகவும் கொடுமையானது", என்றார் அவர்.

கனகரத்தினமும் தானும் தங்களுடைய சகோதரர்களைப் போரில் இழந்திருந்ததாகவும், தங்களுடைய அனுபவங்களைத் தாங்கள் அந்தக் கப்பலில் பகிர்ந்துகொண்டிருந்ததாகவும் பிரணவன் கூறினார். கனடாவுக்கு வந்தபின்னர் தாங்கள் அதிகம் கதைக்கவில்லை என்றும், ஆனால், கனகரத்தினம் பற்றிய Facebook பதிவொன்றைக் கடந்த வருடம் தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

"உறவினர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற படங்களை Facebookஇல் நான் பார்த்தேன், எனவே, அவர் ஒளிந்திருக்கக்கூடுமென எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்", என்கிறார் பிரணவன்.  "உண்மையிலேயே நான் மிகவும் வருந்துகிறேன்."

கனகரத்தினத்தின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் ஒளிந்திருக்கக் கூடுமென எனத் தான் நினைத்ததாகக் கூறுகிறார் பிரணவன் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை

Idsinga இன் கருத்துப்படி கனகரத்தினத்தை ரொறன்ரோவில் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அத்துடன் அவரின் இறப்புக்கு முதல் அவர் ஸ்காபோரோவில் வாழ்ந்தார்.

2015 செப்ரெம்பர் ஆரம்பப் பகுதிக்கும் டிசம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறையினர் நம்புகின்றனர். Selim Esen, 44, Abdulbasir Faizi, 44, Majeed Kayhan, 58, Andrew Kinsman, 49, Dean Lisowick, 47, Soroush Mahmudi, 50, ஸ்கந்தராஜ் நவரத்தினம், 40 ஆகியோரையும் கொலைசெய்ததாக மக்ஆதர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நிழல்படம் ஒன்றிலிருந்து கனகரத்தினத்தை புலன்விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். வழமைக்கு மாறன ஒரு நடவடிக்கையாக கனகரத்தினத்தின் இறந்த உடலின் படமொன்றைக் காவல்துறையினர் வெளியிட்டனர். அவர் யாரென அறிந்துகொள்வதற்கான "கடைசி நடவடிக்கை" என இதை Idsinga விபரிக்கின்றார்.

மக்ஆதரின் மின்கணினியின், பல தடவைகள் அணுகப்படும் தரவுகளை விரைவில் பெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்திலிருந்து (cache) அந்தப் படம் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் CBC ரொறன்ரோவுக்கு கூறியிருந்தனர். அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கு Idsinga மறுத்துவிட்டார். கடந்த வாரம் அந்த மனிதரை அடையாளம் கண்டுவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். வாரவிடுமுறை நாட்களை குடும்ப நபர்களைத் தொடர்புகொள்வதில் தாங்கள் செலவிட்டதாகவும் அவர்களில் பலர் இந்த நாட்டில் இல்லையெனவும் Idsinga குறிப்பிட்டார்,

மக்ஆதருடன் கனகரத்தினத்துக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும், பலியாக்கப்பட்ட ஏனையவர்களில் அனேகமானவர்களுக்குத் தொடர்பிருக்கும் Gay Village (ஓரினச் சேர்க்கையுள்ளவர்கள் வதியும் இடம்) உடன் அவரைத் தொடர்புபடுத்தும் ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் Idsinga கூறுகிறார்.

"இந்த வழக்குடன் தொடர்பாக நாங்கள் அறிந்திருந்த ஏனையவர்களின் விபரங்களுடன் அவர் சரியாகப் பொருந்தவில்லை," என்றார் Idsinga.

மக்ஆதரை எப்படிக் கனகரத்தினம் சந்தித்திருப்பார் என்பது பற்றி அவருக்கு "எதுவும் தெரியாது" எனினும், MV Sun Seaஇல் கனடாவுக்கு வந்தவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமாகவிருந்தது என்று CBC செய்திகளுக்குப் பிரணவன் கூறினார்.

"கனடாவுக்குள் நுழைந்தபோது எங்களுக்கொரு பிரகாசமான எதிர்காலத்தைக் கனடா தருமென நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நேரத்தில் கனடா எங்களைப் பெரிதாக வரவேற்கவில்லை. அதைப் பற்றி உண்மையிலேயே நாங்கள் வருத்தமும் கவலையும் அடைகிறோம்," என்று பிரணவன் கூறினார்.

No comments