நாளைய நிகழ்வுக்கு இன்று ஒத்திகை!


எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை பிற்பகல் 2:15க்கு ஆரம்பித்து வைப்பார். முப்படையினர் அணிவகுக்க, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதரும் ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், வரவேற்று, அழைத்துச் செல்வர். அதன்பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றம் அன்று பிற்பகல் 2 மணிக்கு கூடும். அதன் பின்னர், நாடாளுமன்ற அமர்வு நிறுத்தம் மற்றும் நாடாளுமன்றத்தைக் கூட்டுதல் பற்றிய ஜனாதிபதியின் பிரகடனங்களை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் வாசிப்பார். ஜனாதிபதியை அழைத்துவரும் படை அணிவகுப்பில், குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகளும் அணிவகுத்து வரவிருக்கின்றன. அதற்கான விசேட ஒத்திகை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறவிருக்கின்றன. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையை விடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவருடைய உரை நிறைவடைந்ததன் பின்னர், வேறெந்த நடவடிக்கைகளும் சபையில் முன்னெடுக்கப்பட மாட்டாது. சபை ஒத்திவைக்கப்படும். “இதேவேளை, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படுவதற்கான வைபவத்துக்கு, வி​சேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். “விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக குழுக்கள் சில தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments