காசு கேட்கும் தவராசா: முதலமைச்சரிற்கு தலையிடி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசு தயாராகிவருகின்றது.இந்நிகழ்வுக்காக தான் வழங்கிய 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முற்றுமுழுதாக அரசியல்வாதிகள் முன்னிறுத்தப்படாது மக்களால் மக்களிற்காக என்ற கோசத்துடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இறுதி யுத்தத்தில் அரசுடன் இணைந்து அதனை வெற்றிகொள்ள வைக்க பாடுபட்டதாக கூறிக்கொண்ட புளொட் சித்தார்த்தனுடன் சி.தவராசாவும் வருகை தந்திருந்தார்.சுடரேற்றும் பகுதியில் நின்று படம் காட்ட முற்பட்ட அவர்கள் அங்கிருந்து மாணவர்களால் மக்கள் பகுதிக்கு விரட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடுமையான சீற்றத்துடன் இருக்கின்ற புளொட் சித்தார்த்தனுடன் சி.தவராசாவும் தற்போது தமது முகவர்களின் ஊடாக எதிர் பிரச்சாரங்களை மாணவர்களிற்கு எதிராக எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் வடமாகாணசபை அமர்வு எதிர்வரும் 31ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முதலமைச்சரிற்கு தலையிடி தர தமிழரசு வேண்டுகோளில் அதன் பிரதிநிதியாக தவராசா களமிறக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் 18 ஆம் திகதி அன்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வை வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்வதன் அடிப்படையில் அந்த நிதி பெறப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த நினைவை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்ற அடிப்படையில், தன்னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபாயை தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த அமர்வில் இது குறித்து விவாதத்தை தோற்றுவிக்கவும் முதலமைச்சரிற்கு தலையிடியை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments