வவுனியாவில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்!


வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம்,
“வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல், சித்திரவதை, அராஜகம் போன்றவற்றை எதிர்த்து தாமாகவே குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகளின் சார்பில் சட்டத்தரணிகளாகிய நாம் அவர்களின் நிலைமையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விளக்கமறியல் சிறைக்கூடம் வவுனியாவில் ஏற்படுத்தப்பட்டபோது வட மாகாணத்தை விட்டு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இன்று அது பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் பணம். நின்றால் பணம், இருந்தால் பணம், படுத்தால் பணம் என்ற நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்ளனர்.
ஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டுமாக இருந்தால் நாளொன்றுக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. தொலைபேசி அழைப்பொன்றை உள்ளிருந்து வெளியில் எடுப்பதானால் ஒரு நிமிடத்திற்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும்.

வவுனியா நீதிமன்றம் கஞ்சா அபின் போன்ற போதைப்பொருட்கள் தொடர்பில் மிகவும் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் இந்த சிறைச்சாலையில் எதை நீதிமன்றம் தடுக்க விரும்புகின்றதோ அது தாராளமாக கிடைக்கின்றது.
இந்த நிலை மாறவேண்டும். ஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளின் பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிப்பது நிறுத்தப்படவேண்டும். நாம் முன்பும் பல முயற்சிகளை எடுத்திருந்தோம். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இன்று அதை ஏற்படுத்தவும் இந்த போராட்டத்தை செய்துள்ளோம்.
நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். உடனடியாக இங்கு கடமையாற்றும் அத்தனை உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட வேண்டும்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான குழுவை அமைத்து; சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் சாட்சியத்தை பதிந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்விரண்டையும் செய்யமுடியாவிட்டால் இந்த விளக்கமறியல் சிறைச்சாலையை மூடிவிடலாம் என்கின்ற 3 கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என தெரிவித்தார்.

No comments