இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப தடை?


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் சொந்த இடம் திரும்ப ஆர்வம் காட்டிவருகின்ற போதும் அவர்களிற்கான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது.திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட சாத்தியமேயுள்ளது.

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை அகதிகள் தற்போது வரை விமான மூலம் ஜநா உதவியுடன் அழைத்துவரப்படுகின்றனர்.

இதனால் அவர்களிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அளவு காரணமாக தமது உடமைகளை கைவிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடல்வழியாக தாயகம் திரும்ப கப்பல் போக்குவரத்தை அவர்கள் கோருகின்ற போதும் அது வெறும் பேச்சாகவே உள்ளது.

இதனால் முகாமிலுள்ள சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களது தாயகம் திரும்பும் கனவு வருடக்கணக்கினில் இழுபறிப்பட்டு செல்கின்றது. 

No comments