தீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்!


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வலுப்பெற்று இன்று விசுவரூமெடுத்துள்ளது. எழுச்சி போராட்டத்துக்கு விலையாக 13 பேரின் உயிரை பறித்த காவல்துறையின் அராஜகத்துக்கும் தமிழக அரசின் செயல்பாட்டினையும் கண்டித்து தமிழகமே பற்றி எரிய தொடங்கியுள்ளது. கோவையில் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், கண்டனங்கள், கைதுகளுக்கிடையே இன்று தமிழகம் உக்கிரம் பெற்று வருகிறது.
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. கோவையில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். களம் இறங்கிய மாணவர்கள் இதைதவிர, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுரையில் மாணவர்களும் களம் இறங்கியுள்ளனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக சாலை மறியல் ஈடுபட்டு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து 30க்கும் மேற்பட்டவர் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆட்டோக்களும் ஓடாது காவல்துறையினர் தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அல்லாமல் திமுகவின் தோழமை கட்சிகளின் சார்பில் நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என ஆட்டோ சங்கத்தினர் தெரிவித்துள்ளனா். பாரதிராஜா, வேல்முருகன் துப்பாக்கி சூட்டினை கண்டித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் இன்று மாலை கோட்டை முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட் உள்ளனர். இந்த பேரணிக்கு இயக்குனர் பாரதிராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமை தாங்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்றுமாலை ஜாக்டா ஜியோ அமைப்பினரும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தினை செய்ய போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். போலீசாரே காரணம் ஒட்டுமொத்தமாக தமிழகமே போர்க்கோலம் பூண்டு வருகிறது. எந்த போராட்டத்துக்கு எவ்வளவு போலீசார் பாதுகாப்பு வழங்க போகிறார்களோ? எவ்வளவு போலீசார் குவிக்கப்படுவார்களோ? தெரியாது. ஆனால் இன்று நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்கார்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதில் மாணவர்களும் களத்தில் இறங்க தொடங்கிவிட்டார்கள். எப்படியோ... தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற காரணமாக இருந்த போலீசாரே இன்று அந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கவும் காரணமாக அமைந்துவிட்டனர்.

No comments