துண்டு துண்டாக காணிகள் விடுவிக்கும் படையினர்?


குடாநாட்டின் பலபகுதிகளிலும் பகுதி பகுதியாக காணிகளை விடுவிப்பதன் மூலம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த அரச படையினர் முனைப்பு காட்டிவருகின்றனர். அவ்வகையில் அச்சுவேலி பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகளில் ஒரு பகுதியை இன்று படைத்தரப்பு விடுவித்துள்ளது.


9 குடும்பங்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணிகள் யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட 1995 ஆம் ஆண்டு முதல் 521 ஆவது படையணியின் பயன்பாட்டிலிருந்தது.

இதில் 50 வீதமாக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி காணிகள் எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் விடுவிக்கப்படும் எனவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த காணிகளை சுவீகரிக்க பல தடவைகள் படைத்தரப்பு முயற்சிகளை மேற்கொணடிருந்த நிலையில் மக்களின் போராட்டங்களால் கைவிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக நீதிமன்றில் வழக்கு காணி உரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னரும் காணிகளை விடுவிக்க படைத்தரப்பு பின்னடித்து வந்திருந்த நிலையில் தற்போது ஒருபகுதியை விடுவித்துள்ளது.

இதேவேளை, மிகுதி காணிகளும் விடுவிக்கப்படும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments