மகிந்த, துமிந்தவின் பதவிகள் பறிப்பு? - எஸ்.பி, சுசிலுக்கு வாய்ப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் உட்பட கட்சிகளின் இதர பதவிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும், அடுத்த வாரம் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலுக்கு முகம்கொடுக்கும் வகையிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிருப்தியாளர்களைச் சமாளிக்கும் நோக்கிலும் இந்த மாற்றங்களை உடனடியாகச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த மாற்றத்தின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும் வழங்கப்படலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மஹிந்த அணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பதுடன், தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிரணி வரிசையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ள சு.கவின் 16 பேர் கொண்ட அணியில் அங்கம் வகிக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்களாகத் தற்போது அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.இவர்களுக்கு எதிராக சு.கவின் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாணியில் சு.க. மற்றும் ஐ.ம.சு.முவை முழுமையாக மறுசீரமைக்க ஜனாதிபதி மைத்திரி தீர்மானித்துள்ளார்.

No comments