டாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2

முள்ளிவாயக்கால் நினைவேந்தல் மக்களால் மக்களிற்காகவெனும் கோசத்துடன் வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது. கவலை தோய்ந்த முகங்களுடன் புகைப்படங்களிற்கு முகம் காட்டும் எந்தவொரு அரசியல்வாதியினது புகைப்படங்களையும் இம்முறை எங்கும் காணக்கிடைக்கவில்லை.ஆறாது துயருடன் அழுதுகதறிய உறவுகளது முகங்களே சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும பரவிக்கிடந்தது.

முதலில் வந்த சித்தார்த்தன்...

நினைவேந்தல் ஏற்றும் தூபி அருகாக முதலில் வருகை தந்திருந்தவர்கள் யாரென பார்த்தால் சீற்றமே எஞ்சும். புலிகளை தோற்கடிக்க தானும் இலங்கை அரசிற்கு தோள் கொடுத்ததாக சொன்ன சித்தார்த்தனும் நடந்தது இனஅழிப்பல்லவென இன்றுவரை வாதிட்டுவரும் சயந்தன் மற்றும் ஆனோல்ட் கும்பலுமே சுடரேற்ற காத்திருந்தனர்.

நாகரிகமாக அங்கு வந்த பாடசாலை மாணவர்கள் (பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல) ஜயா உங்களிற்கு பொதுமக்கள் பகுதியில் இடமொதுக்கப்பட்டுள்ளது அங்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்திருந்தனர். அவர்களே ஒழுக்க நடைமுறைகளிற்கென அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.

அவர்களிற்கு அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களென அனைவரும் ஒன்றாகவே அடையாளம் தெரிந்திருந்தது.

எவ்வாறேனும் முதலமைச்சருடன் கூட நின்று புகைப்படத்தில் தானும் நிற்க ஆசைப்பட்ட ஜனநாயப்போராளிகள் கட்சி ஊடகப்பேச்சாளர் துளசியும் கூட கழுத்தை பிடித்துதள்ளாத குறையாக மக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

பரடோ ஜீப்பில் ஜனநாயப்போராளிகள்.....

கட்சி ஆரம்பித்தவேளை பத்திரிகையாளர் மாநாடொன்றில் பத்திரிகையாளர் மாநாட்டில் வருகை தந்த ஊடகவியலாளார்களிற்கு தேனீர் தரக்கூட தம்மிடம் காசில்லையென்ற துளசியின் பராடோ ஜீப் அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. துளசியுடன் கூட திரிந்த ஜனநாயகப்போராளிகளது சொகுசு வாகனங்களையே அவர்களது தற்போதைய இருப்பையும் அவர்களது செழிப்பையும் அரசியல் பாதைமையயும் காட்டியே நின்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர்  துளசி மாணவர்களால் வெளியேற்றப்படும் காட்சி

மே 16ம் திகதி நடைபெற்ற ஏற்பாட்டு நிகழ்வில் சுடரேற்றும் பகுதியில் ஜனநாயகப்போராளிகள் மட்டுமே நிற்கமுடியுமென துளசி தெரிவிக்க மாணவ தலைவர்கள் குழம்பிப்போயிருந்தனர். நிகழ்வு தவறான நிகழ்ச்சி நிரலாகிவிடுமோவென்ற அச்சம் மாணவர்களிடமிருந்தது. அதனால் தான் மாணவர்களது கறுப்பு உடை அணி உள்ளே பிரச்சன்னமாகி கட்டுகாவலில் நின்றது. ஒலிவாங்கி அவர்கள் வசமிருந்தது. அவர்களை பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் எவரிற்குமான அரசியல் இலாபங்களிற்காக இல்லாதிருக்கவேண்டுமென நிலைப்பாடே காரணமாகியிருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் மக்கள் கூட்டத்தில் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் பருப்பு அவியாது போன தமிழரசு தலைகள் வழமை போலவே இப்போது மாணவர்கள் மீது தமது முகவர்கள் மூலம் சேறடிக்க தொடங்கியுள்ளன.

இதே போன்று சுடரேற்ற முதலமைச்சர் அழைக்கப்பட்டபோது அவருடன் அவைத்தலைவர் சீ,வீ.கே.சிவஞானம், மாவை சேனாதிராசா, சிறீதரன், சரவணபவன், சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினரென பெருபடையணியொன்று படையெடுத்து வந்தது.
மக்களோடு மக்களாக நிற்கும் கூட்டமைப்பின் பிரமுகர்கள்

மிகத்தெளிவாக மக்களை வழிநடத்துவதில் நின்றிருந்த பாடசாலை மாணவர்கள் முதலமைச்சரை அனுமதித்து மற்றையோரை மக்கள் பகுதிக்கு திருப்பினர். சகபாடிகளை கைவிட்டு உள்ளே வர முதலமைச்சரும் சில நிமிடம் பின்னடிக்க பின்னர் அவர் மட்டும் உள்ளே வந்தார். ஏனெனில் தீர்மானிப்பவராக அவரால் அங்கு அப்போது இருந்திருக்கமுடியவில்லை.

உண்மையில் சிறு சிறு தவறுகள் தவிர்த்து மக்களால் மக்களிற்கு நினைவேந்தல் நிறைவேற்றப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் சேர்ந்து அனுஸ்டிக்கப்போவதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது. சிலர் சொல்வது போன்று புலம்பெயர் தரப்பினை சேர்ந்த சிலர் அதன் பின்னாலிருந்திருக்கலாம். அரசியலை நீக்கி நினைவேந்தலை நடத்த மாகாணசபையை புறமொதுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுமிருக்கலாம். ஆரம்பம் அவ்வாறு தான் இருந்தது. முடிவு அவ்வாறு தீர்மானிக்கப்பட்டது போன்றிருக்கவில்லை.

ஆனால் வடமாகாணசபையோ வழமை போன்று தானே நடத்தப்போவதாக தெரிவித்தது. வழமை போலவே கார்களில் வந்து தரையிறங்கி விளக்கேற்றி ஊடகங்களிற்கு புகைப்பட கண்காட்சி நடத்துவதே அதன் நோக்கமாவிருந்தது.

அடுத்த வடமாகாணசபை தேர்தலிற்கு காலம் அண்மிப்பதால் வெற்றிக்கான முதலீடாகவும் அறுவடைக்கு நல்லதொரு தளமாகவும் முள்ளிவாய்க்கால் இருந்தது.

இந்நிலையில் முதலமைச்சர் மாணவர்களை பேச்சிற்கு அழைக்க தாம் முதலமைச்சரை சந்திக்கமாட்டோமென மாணவர்கள் மார்தட்ட செயற்பாட்டாளர்கள் சிலர் களமிறங்கினர். தமிழ் மக்கள் பேரவை சார்ந்த மருத்துவரொருவர், ஊடகவியலாளர்கள் சிலர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு சிலர் தமது பணிகளை ஆரம்பித்தனர்.

பாதை மாறப்பார்த்த மாணவர்கள்....

மாணவர்களிடையே நடந்த கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விக்கு பதிலளித்த மாணவ தலைவர் ஒருவர் முதலமைச்சர் அழைத்தால் பேசத்தயாரென்றனர். இச்செய்தி முதலமைச்சரிற்கு கொண்டு செல்லப்பட அவரோ நம்பிக்கையற்றவராக அடுத்த தினம் மாலை வேளை நேரமொதுக்கி செயற்பாட்டாளர்களிற்கு அறிவித்திருந்தார்.

ஆனால் இச்செய்தியை பெற்றுக்கொள்ள மாணவ தலைவர்கள் தொலைபேசியில் பதிலளிக்க மறுத்தனர். இதனையடுத்து சந்திப்பு செய்தி ஊடகங்களிற்கு வழங்கப்பட்டு செய்தியாக்கப்பட்டு முதலமைச்சரை சந்திக்க மாணவர் தலைவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனால் மாணவ தலைவர்கள் அதிர்ந்து போயிருந்தனர். மக்களின் முன் ஊடகங்கள் செய்திகளை கொண்டு சென்றதனையடுத்து கட்டாயமாக மக்களை சந்திக்கவேண்டிய நெருக்கடி மாணவ தலைவர்களிற்கு உருவாகியிருந்தது.


இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஊடகங்களை நோக்கி போக்கிலித்தனமான வேலை பார்ப்பதாக சீற்றமாக கருத்துக்கள் முன்வைத்திருந்தார். ஆனாலும் மக்களது கருத்துக்கள் முதலமைச்சரை இணைத்து பல்கலைக்கழக சமூகம் நினைவேந்தலை நடத்துவதே நல்லதென்ற தகவல் அனைத்து மாவட்ட ஊடகவியலாளர்களாலும் ஆலோசனையாக பகிரப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற சந்திப்பில் மாணவ தலைவர்கள் தமக்கு ஆதரவாக பொது அமைப்புக்களையும் அழைத்துவர முதலமைச்சர் வடமாகாணசபை தரப்புக்களை அழைத்துவர மீண்டும் முறுகல் உச்சம் பெற்றது.

குழப்புவதில் அனந்தி, ரவிகரன் அணி.....

குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அமைச்சர் அனந்தி மாணவர்களிற்கும் முதலமைச்சரிற்குமிடையே முறுகலினை தோற்றுவிக்கும் வகையில் தகவல்களை திரிபுபடுத்தி வெளியிட்டவண்ணமிருந்தனர். அடுத்த தேர்தலிற்கான முதலீடு பற்றிய கவலை அவர்களிருந்தது.

இந்நிலையில் மூத்த போராளிகளான காக்கா போனறவர்களை மக்கள் முன்பே கொண்டு வந்த செயற்பாட்டளர்கள் தமது நகர்வுகளை ஆரம்பித்தனர்.

ஓட்டுமொத்த தமிழ் தேசியம் சார்ந்து செயற்பட்ட ஊடகங்களது நிலைப்பாடு, மக்களதும் பொது அமைப்புக்களதும் உறுதியான நிலைப்பாடே மாணவர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மத அமைப்புக்கள், வடமாகாணசபை என அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து நினைவேந்தலை முன்னெடுக்க காரணமானது.

ஆனாலும் கடைசி நிமிடம் வரை தனிநபர் நலன்களை முன்னிறுத்தி அரசியல்வாதிகள் பலரும் அனைத்து மட்டங்களிலும் குழப்பங்களை மேற்கொள்ள துடித்துக்கொண்டேயிருந்தனர். மாணவ தலைவர்களோ தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிடக்கூடாதென நின்றனர். ஒவ்வொரு கணத்திலும் சேர்ந்து போகும் மாணவ தலைவர்களை வழிநடத்த செயற்பாட்டாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் தமது மாணவர்களிடையே நம்பிக்கையிழந்து போகவண்ணம் செயற்படவும் அவர்களிற்கு தேவைகள் இருந்தது.

புலம் பெயர் தேசங்களில் பிரித்தானியாவில் பிளவுபட்டு நினைவேந்தலை முன்னெடுக்க தாயகத்தில் பிளவுபட்ட தரப்புக்களினை ஒன்றிணைக்க முகம் தெரியாத செயற்பாட்டாளர்கள் பலரும் பாடுபட்டனர்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக யாழ்.பல்லைக்கழக சமூகம் அமைந்திருந்தது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூட இனஅழிப்பு தீர்மானமொன்றை நிறைவேற்றியவகையில் தனக்கான இருப்பை தக்கவைத்துக்கொண்டார்.

சொன்ன செய்தி என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பெற்றுத்தந்த அனுபவம் நினைவேந்தலிற்கான குழுவொன்றை அமைப்பதற்கான தேவையினையும் வெறுமனே அழுதுவிட்டு கலைவதற்கான இடம் அதுவல்லவென்ற செய்தியையும் அனைவரிற்கும் உணர்த்தி சென்றுள்ளது. 

அடுத்துவருகின்ற காலம் தொடர்பில் முள்ளிவாய்க்கால் மீண்டும் ஒரு செய்தியை தந்திருக்கின்றது.

எங்குபோய் மண்டியிட மறுத்து மடிந்து போக ஈழமண் தயாரானதோ அதே மண்ணிலிருந்து மீண்டுமெழும் காலம் கனிந்துவிட்டது.

எங்களை அழமட்டுமேனும் விடுங்களென சொல்வது இனி  தேவையில்லை.அழுகையினை தாண்டி செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

No comments