13வது மகனை 23 பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த தாய்!!

ஆந்திராவில் உடல்நலமில்லாத தாய் ஒருவர், தன் 13 வயது மகனை 23 வயது பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பாராஹல் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி, 13 வயது சிறுவன் ஒருவனுக்கும், 23 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு விசாரணை நடத்தினர். ஆனால், காவல்துறை வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட சிறுவன் மற்றும் அப்பெண்ணின் குடும்பத்தார் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால், அவ்வூர் மக்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அதில், திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் சிறுவனின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அவரது தாய் உடல்நலமில்லாதவர் என்றும் தெரியவந்தது. மேலும், உடல்நலமில்லாத அத்தாய் விரைவில் தான் இறந்து விட்டால், தன் நான்கு குழந்தைகளையும் யார் கவனித்துக் கொள்வார்கள் எனக் கவலைப்பட்டுள்ளார்.

இதனால், தனது 13 வயது மகனுக்கு வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி, சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்ற உறவுக்காரப் பெண்ணை தன் மருமகளாக்கிக் கொண்டார். அதிக ஆடம்பரமில்லாமல் எளிமையாக இந்தத் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாயின் மகிழ்ச்சிக்காக அச்சிறுவன் தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால், அது உண்மையில்லை, அப்பெண்ணும், அச்சிறுவனும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். எனவே, இருவீட்டார் சம்மதத்துடன் தான் இத்திருமணம் நடைபெற்றது என்கின்றனர் வேறு சிலர். தற்போது திருமணம் ஆனதாகக் கூறப்படும் மைனர் சிறுவன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிச் செல்வதை நிறுத்திவிட்டு வேலை பார்த்து வருவதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், 'இது காதல் திருமணமா அல்லது பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணமா என்பது முக்கியமில்லை. 21 வயது நிரம்பாத சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றம். எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.



No comments