1000 மாணவர்கள் ஒரே மேடையில் நடனம்! மட்டக்களப்பில் சாதனை!

மட்டக்களப்பில் 1000 மாணவர்கள் ஒரே மேடையில் தோன்றி நடன நிகழ்வொன்றை நடத்தி சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

சுவாமி விபுலானந்தரின் 126ஆவது ஜனனதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் 1000 மாணவர்கள் பங்குகொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் நடன ஆசிரிய ஆலோசகர் கலாவித்தகர் திருமதி மலர்விழி சிவஞான சோதி குருவின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுவாமி விபுலானந்தருக்கு வழிபாடுகள் நடைபெற்றதுடன் மைதானத்தில் தோன்றிய 1000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி சாதனையினை படைத்தனர்.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பெற்றோர், பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த நிகழ்வினை நடாத்தி சாதனை படைத்த ஏற்பாட்டாளர்கள், வலய கல்வி பணிப்பாளர் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.

No comments