வடமாகாண புதிய அமைச்சர்களிற்கு குடைச்சல்?

வடமாகாணசபையின் புதிய அமைச்சர்களினை ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்க வைப்பதில் தமிழரசுக்கட்சி உக்கிரமுனைப்பு காட்டிவருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் கணக்காய்வு திணைக்களத்தின் ஊடாக அறிக்கையொன்றை பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

வடமாகாண அமைச்சர்களில் தற்போதுள்ள சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா.குணசீலன், கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் தமிழரசுக்கட்சிக்கு விருப்பத்திற்குரியவர்களாக இல்லாதுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்களினால் பதவி துறந்த அமைச்சர்கள் புதிய அமைச்சர்களிற்கு குழிபறிப்பதிலும், அவர்களது கைகள் களங்கப்பட்டிருப்பதாக காண்பிக்கவும் முனைப்பாக உள்ளனர். அதில் தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய அமைச்சர்களது தனிப்பட்ட ஆளணி தொடர்பான விவகாரமொன்றை பூதாகரப்படுத்தி முதலமைச்சரிற்கு குடைச்சல் கொடுக்க மும்முரமாக இத்தரப்புக்கள் முற்பட்டுள்ளன.
எனினும் அவர்கள் அமைச்சர்களாக இருந்த காலப்பகுதியில் எவ்வாறு தனிப்பட்ட ஆளணியை பேணினரோ அதனையே தற்போதைய அமைச்சர்களும் தமது ஆதரவாளர்கள் மூலம் நிரப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஆளணியினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக ஒருபுறம் குடைச்சல் கொடுத்தவாறு மறுபுறம் தம்மீதான விசாரணைகளை மீள ஆரம்பித்து தம்மை புனிதர்களாக்க, முதலமைச்சரை சத்தியலிங்கம் உள்ளிட்ட தரப்புக்கள் நிர்ப்பந்தித்துவருகின்றன.

அவ்வகையில் மாகாணசபையின் இறுதி அமர்வில் முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் தனது அரசியல் நேர்மையினை நிரூபிக்க கால அவகாசம் பற்றி பேசியிருந்தார்.

இந்நிலையிலேயே புதிய அமைச்சர்களது தனிப்பட்ட ஆளணி தொடர்பிலான அறிக்கையொன்று இன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதிலும் குறிப்பாக மகளிர் விவகார அமைச்சர் மீதான கனத்த முறைப்பாடுகள் அறிக்கையில் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

தம்மீதான குற்றச்சாட்டுக்களினை புதிய அமைச்சர்கள் மறுதலித்துவருவது தெரிந்ததே.

No comments