தியாகிகளிற்கே தூபி:துரோகிகளிற்கல்ல!



தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு மட்டுமே நினைவுச்சின்னங்களை உருவாக்க வேண்டுமே தவிர , தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக அரசுப் படைகளுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களை அமைக்க முடியாதென யாழ்.மாநகரசபை அமர்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளரும் பேச்சாளருமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபை கன்னியமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகரசபை சபா மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சபை உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபை பிரதான வாயில் இருந்து மேள நாதஸ்வர இசையுடன் மலர்மாலை அணிவித்து சபா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
முதலாவது அமர்வில் தனது கன்னி உரையினை ஆற்றியிருந்த வி.மணிவண்ணன் பெயர்மாற்றப்பட்ட கிட்டுப்பூங்கா மறுபடியும் கிட்டுப்பூங்கா என்ற பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும், முன்னர் மாவீரர்களின் பெயரால் அழைக்கப்பட்ட வீதிகள் மீண்டும் அவ்வாறே பெயர் சூட்டப்பட வேண்டும், பேரினவாதிகளால் அழிக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் அண்ணாவின் தூபியை அவர்களின் அடக்குமுறைக்கு நினைவுச்சின்னமாக வைத்துக்கொண்டு அதன் அருகில் புதிய தூபியை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேனென தெரிவித்திருந்தார்.

No comments