விஜயகாந்தை மிரட்டிய மனோவின் மெய்ப்பாதுகாவலர்!


தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க தவறிய அரசிலிருந்து அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசனை பதவி துறக்க சொன்னவருக்கு அச்சுறுத்தலே மிஞ்சியுள்ளது.
9 இனங்களும் மூன்று மொழிகளும் நான்கு மதங்களும்கொண்டதே எமது நாடு என எம்மால் அடையாளம்கானப்பட்ட இந்த நாட்டில் ஒரே இனம் , ஒரே மொழி , ஒரே மதம் என்னும் நிலமையை தோற்கடித்து வருகின்றோம் என ஒருபுறம் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் மறுபுறம் தனது மெய்பாதுகாவலர் மூலம் மிரட்டியமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தாவடி வேத விநாயகர் விளையாட்டுக் கழக பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சரிடம் படுகொலை செய்யப்பட்ட தமிழரசு அரசியல்வாதி பொன்.மதிமுகராசாவின் மகன் விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் ,இந்த மண்ணில் போராட்ட வடிவம் மாறியும் போராட்டம் மாறவில்லை. அந்தப் போராட்டம் உலகிலும் தொடர்கின்றது. தற்போது சிரியாவில் அந்தப் பனிப்போர் மூட்டுள்ளது. அன்று எமது மண்ணில் நிகழ்ந்தது இன்று சிரியாவில் இடம்பெறுகின்றது. இவ்வாறு எமது மண்ணில் இடம்பெற்ற போராட்டத்தின்பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே நாட்டுக் கோட்பாட்டிற்குள் வந்துள்ளனர்.

ஒரே நாடு என்றாலும் சரி ஒரு நாடு இரு தேசம் என்றாலும் சரி நாம் பாரம்பரிய தேசிய இனம் என்பதனை மறக்கமுடியாது. அதேநேரம் தமிழ் , சிங்களம் , முஸ்லீம் என்பதனை தவிர்த்து சிங்கள நாடு என்றால் மீண்டும் தனிநாடு கோரிபோராடும் நிலைமையே ஏற்படும். இதனை தீர்ப்பது கொழும்பு அரசுதான். இங்கே முழு சிங்கள தேசத்தினையும் திருப்திப்படுத்த முடியாது விட்டாலும் ஓரளவேனும் வெற்றிகொள்வேனா என்பதும் தெரியாது.
தந்தை செல்வா இலங்கைத் தலைவர்களுடன் ஒப்பந்தம் எழுதி தனது வழியில் வெற்றிபெற முனைந்து முடியாமல்போகவே தமிழனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார். அதன் பின்பு அமிர்தலிங்கம் இந்தியாவின் ஊடாக தீர்விற்கு முயன்றார் ஓர் சட்டம் என்று முதலாவதாக 13ம் திருத்தச் சட்டம் கொண்டுவந்தார். இதன் பின்பு பிரபாகரன் ஆயுதவரியில் முயன்ற சமயம் ஈழத் தமிழர்களின் அபிலாசை உலகம் முழுவதும் ஒலித்தது. இருப்பினும் இறுதியில் திருப்தி இன்றி முடிந்தது.

தற்போது மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி உலக நாடுகள் மற்றும் ஐ.நா அமைப்பின் ஊடாக புதிய யாப்பிற்காக முயற்சியில் ஈடுபடுகின்றார். நான் சிங்கள மக்களை சக வாழ்வு வழிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன். இவை சரிவரும் என நான் கூறவில்லை. ஆனால் சரிவராது போனால் அன்று தந்தை செல்வநாயகம் சொன்னார் தமிழனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என இன்று நடக்கும் முயற்சிகள் சரிவராமல்போனால் இந்த நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சணையை தெற்கில் சிங்கள மொழியில் எடுத்துக்கூறிய ரவிராஜினை 2001ம் ஆண்டு காணும் வரையில் எனக்கு சிங்களம் தெரியாது. அதன்பின்பு ரவிராஜ்ஜை பின்பற்றியே சிங்களம் கற்றேன். இதேநேரம் முழுச் சிங்களவர்களும் அயோக்கியர்களோ அல்லது கெட்டவர்களோ கிடையாது என்பதனையும் இங்கே கூறி வைக்க விரும்புகின்றேன். அதேபோல் எமது மக்கள் பட்ட துண்பத்தை அவர்கள் துயரத்தை அதேபோல் கோபத்தையும் தெற்கில் சிங்கள மொழியில் கூறிவருகின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் பொ. விஜயகாந்த் மனோ கணேசனிடம் ஏதும் செய்யாத அரசெனில் பதவியை ராஜினாமா செய்யலாமேயென கேள்வி எழுப்பிய நிலையில் பாதுகாப்பு அதிகாரியொருவரால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளார். பின்னர் மனோ கணேசனின் பாதுகாப்பிற்காக வந்த ஆறு விசேட அதிரடிப்படையினர் இணைந்து பொ. விஜயகாந்தை வாகனத்தில் துரத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிற்பகல் தாவடி வடக்கிலுள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் பொ. விஜயகாந்தின் தாவடி வடக்கிலுள்ள இல்லத்தின் வாயில் கேற்றை உடைத்துக் கொண்டு துப்பாக்கிகளுடன் அத்துமீறிய விசேட அதிரடிப்படை வீட்டிலிருந்த அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் அடாவடியாகச் செயற்பட்டுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்துள்ள பொ. விஜயகாந் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மனோ கணேசன் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments