மகாவலி எனும் பெயரில் சிங்கள குடியேற்றம்

மகாவலி எனும் பெயரில் தென்பகுதி மக்களை வடக்கில் குடியேற்றும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப .சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மகாவலி திட்டம் என்ற போர்வையில் வவுனியா வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றும் வேலைத்திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனால் எமது மக்கட்தொகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2009 க்குப் பின்னர் பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அளிக்கப்பட்டு இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல காடுகள் அளிக்கப்பட்டு அதனைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் ஆயத்தங்கள் நடைபெறுவதாக எம்மால் அறிய முடிகிறது.

மகாவலி போன்ற திட்டங்கள் எமக்கு மிகவும் அவசியமானதாகவே உள்ளது. ஆனால் இவற்றோடு சிங்கள குடியேற்றங்களும் வருவதே பாரிய பிரச்சனையாக உள்ளது.

ஆனால் மகாவலி திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களில் ஒருவர் கூட வட. மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இங்கு காணிகள் இல்லாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே அந்த திட்டங்களிலே எமது மக்களை குடியேற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இவ்விடயங்கள் தொடர்பாக எமது மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

No comments