திரும்பி வந்தார் ரெஜினோல்ட் கூரே!


வடக்கு மாகாண முதலமைச்சருடனான புரிந்துணர்வுடன் ஆளுநராக மீளவும் நியமனம் பெற்றுள்ள றெஜினோல் கூரே இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


நீண்ட நாள் விடுப்பிலிருந்த வடக்கு ஆளுநருக்கும் முதலமைச்சரிற்குமிடையே முறுகலை தோற்றுவிக்க அரசியல் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் முயற்சிகள் நடைபெற்று வந்திருந்தது.


இந்நிலையில் முதலமைச்சர் ஆளுநரை நேரடியாக சந்தித்துப்பேச்சுக்கள் நடத்தியதையடுத்து சுமூக நிலை ஏற்பட்டிருந்தது.


முன்னதாக வடமாகாண அரசியலால் சலிப்புற்றிருந்த ஆளுநர் இடமாற்றமொன்றை விரும்பியிருந்ததாக சொல்லப்படுகின்றது.இதனையடுத்தே மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில், இன்று (17) யாழுக்கு வந்த கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மீளவும் வடக்கு மாகாண ஆளுநருக்கான தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.


No comments