கேமரா, செல்போன், கருப்பு துணி என சகலத்திற்கும் தடை - சேப்பாக்கத்தில் திரள்வார்களா ரசிகர்கள்?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சென்னையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். போட்டிகள் நடக்க இருப்பதாலும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களம் இறங்குவதாலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்றைய முதல் நாள் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் ஏற்கனவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இந்த நிலையில் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் விவசாய சங்கத்தினர், சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை மீறி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஐ.பி.எல். போட்டியின் போது ஏதேனும் இடையூறு செய்தால், அதன் மூலம் தேசிய அளவில் காவிரி பிரச்சினை பற்றிய கவனத்தைப் பெற முடியும் என்று சில தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள நியாயமான உரிமையைப் பெற இத்தகைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையே சேப்பாக்கம் மைதானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட போலீசார், போட்டி நடக்கும் போது சிறு எதிர்ப்பு கூட எழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் போலீசாரை குவிக்கத் தொடங்கியுள்ளனர்

ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கனின் நேரடி மேற்பார்வையில் போலீசார் ஸ்டேடியம் முழுக்க பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

3 இணை கமி‌ஷனர்கள், 13 துணைக்கமி‌ஷனர் கள், 29 உதவிக்கமி‌ஷனர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். போலீசாரில் ஒரு பிரிவினர் முதல் அடுக்காக மைதானத்தை சுற்றி நிற்பார்கள்.

2-வது அடுக்கில் உள்ள போலீசார் ரசிகர்கள் இருக்கைக்கும், மைதானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நிற்பார்கள். 3-வது அடுக்கு போலீசார் நுழைவாயில் பகுதிகளில் குவிக்கப்பட்டு இருப்பார்கள். வெளியில் இருந்து மைதானத்துக்குள் செல்லும் முக்கிய நுழைவாயிலில் 4-வது அடுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை, விக்டோரியா ஆஸ்பத்திரி சாலை ஆகியவற்றில் 5-வது அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியை செய்வார்கள்.

சேப்பாக்கம் மைதானத் துக்கு இன்று காலை முதலே கிரிக்கெட் ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். அடையாள அட்டை வைத் துள்ள கார்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக் கப்பட்டு வருகிறது. பிற்பகல் 3 மணியில் இருந்தே கார்கள் வருகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதை கருத்தில் கொண்டு பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை, விக்டோரியா ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட மைதானத்தை சுற்றி உள்ள 4 பக்க சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 சாலைகளிலும் போராட்டக்காரர்கள் குவிந்து மறியல் செய்து விடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 6 மணிக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள 4 சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

5 அடுக்கு பாதுகாப்பு தவிர சுமார் 200 வீரர்கள் கொண்ட கமாண்டோ படையின் ஒரு அணி மைதானத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் கமாண்டோ படையின் 4 குழுக்கள் மைதானத்துக்குள் ரோந்து சுற்றி வருகிறார்கள். மேலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்டேடியம் அருகே கூடுதல் விலைக்கு டிக்கெட் பெற முடியும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள்.

எனவே இன்று மாலை சுமார் 50 ஆயிரம் கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிய வாய்ப்புள்ளது. இந்த 50 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டக்காரர்கள் ஊடுருவி விடக்கூடாது என்று சென்னை போலீசார் உஷாராக உள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் தவிர வேறு எந்த பொருளையும் ரசிகர்கள் கொண்டு வர வேண்டாம் என்று ஐ.பி.எல். போட்டி அமைப்பாளர்களும், போலீசாரும் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments