பேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்!

இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றிரவு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடனான பேரம் முடிவுக்கு வந்ததையடுத்தே இம்முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.

கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு ரணில் விக்கிரமசிங்க, எழுத்து மூல உறுதிமொழி வழங்கியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நடைபெற்ற போது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க வேண்டுமென இரா.சம்பந்தன், மாவை, சுமந்திரன், மற்றும் சுமந்திரன்,சிறிநேசன் ஆகியோர் விடாப்பிடியாக நின்றுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவும் ரணிலிடம் ஒப்புதல்கள் சிலவற்றை பெறவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையினில் இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபாலவை சென்று சந்தித்ததுடன் அவரது நிலைப்பாட்டை கண்டறிய கூட்டமைப்பு முற்பட்டிருந்தது.

இச்சந்திப்பின் தொடர்ச்சியாக ரணிலிடம் எழுத்து மூலமாக சில கோரிக்கைகள் வைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. உயர்பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படல், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல், வேலைவாய்ப்பு வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றை நிறைவேற்ற ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து நாளை இலங்கைப்பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments