விடுவிக்கப்படாத இரணைதீவு: மக்கள் போராட்டம் ஓராண்டில்!


கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருட பூர்த்தியை அண்மிக்கவுள்ளது.இதனை முன்னிட்டு நாளை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரணைதீவு பகுதியில் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பான கலந்துரையாடல் பூநகரி பிரதான கடற்படை தளத்தில் நடைபெற்றுமிருந்தது.

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டுமிருந்தனர்.
இக்காணியை விடுவிப்பது தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாக கடற்படை தெரிவித்துவருகின்றது.இரணைதீவு பகுதி, தேசிய பாதுகாப்புக்கு முக்கிய ஒரு இடமாக இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும் ராடர் கண்காணிப்பு நிலையங்கள் இருப்பதனால் இரணைத்தீவினுடைய வடக்குப் பகுதி முழுமையாகத் தேவையென்றும் கடற்படையினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை அந்தப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றும் போது கடற்கரையோரப் பகுதிகளிலுள்ள கடல்வாழ் உயரினங்கள் அழிவடையும். அத்துடன், அங்கு குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என குடியேறுவதை தடுக்கும் வகையில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை அரசு எந்தவொரு நடவடிக்கையினையும் எடுத்திராத நிலையில் நாளை திங்கட்கிழமை இரணைமாதா நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்த இரணைதீவு இரணைமாதா நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைத்து தரப்புக்களிற்கும் அது கடிதங்களை அனுப்பியும் வைத்துள்ளது.

No comments