அவனை நான் தூக்கும் போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான்


அவனை நான் தூக்கும் போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான் நாளை சங்கரின் நினைவு நாள். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு அவன் ஒரு அழையா விருந்தாளி! எப்ப வருவான் எப்ப போவான் என்றே தெரியாது. இன்று அவன் இல்லாவிட்டாலும் அவனை நான் தூக்கும் போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கரைப்பற்றி எழுதியிருந்தேன்….. அதனை இங்கே பதிவிடுகிறேன். நாங்கள் இரட்டைவாய்க்காலில் இருக்கும் போது தான் அந்த துயரச்சம்பவம் நடந்தது. இரட்டைவாய்கால் பகுதியில் தான் ஈழநாதம் இயங்கிக்கொண்டிருந்தது. ஏப்பிரல் மாதம் நடுப்பகுதி இருக்கும். அன்று காலை வீட்டிலிருந்து ஈழநாதத்திற்கு சென்று கொண்டிருந்தேன். 300 மீற்றர் சென்றுக்கொண்டிருக்கும் போது எனக்கு பின்னே ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்தது. நானும் அதை பெரிது படுத்தவில்லை. பல எறிகணைகள் என்றால் வீழ்ந்து படுக்கலாம் ஒரு எறிகணை தானே என்று நான் போய்விட்டேன். எமது பணிமனையில் இருந்து நானும் செல்வராசா அண்ணையும் எறிகணை வீழ்ந்த பகுதிக்கு சென்றோம். அது எங்கள் வீட்டிற்கு கிட்டிய தூரத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்திருந்தது. நாங்கள் அவ்விடத்திற்கு செல்ல சங்கரின் அம்மா கதறி அழுதுகொண்டு இருந்தா “ஐயோ சுரேன் விரல் சூப்பிக்கொண்டே செத்து போனான். ஏன்ர கடவுளே உள்ளே பாருங்கோ” என்று சங்கரின் அம்மா கதறி அழுது கொண்டிருந்தா.
சிறிய தரப்பாள் கூடாரத்திற்குள் சங்கர் கவுண்டு படுத்திருந்தான். அவன் செத்த மாதிரி தெரியேல்ல. கிட்ட போய் அவன் சேட்டோடு சேர்த்து தூக்கினேன். சூப்பிய விரல் கீழே விழுகிறது. ஏனக்கு கவலையாகக்கிடந்தது. அவனுக்கு சின்ன வயதிலேயே விரல் சூப்பிற பழக்கம் இருக்கு. அவன் அதை நிறுத்தவில்லை. அவனுக்கு நான் பல தடைவ வாயில சுண்டுவன். அப்பிடி இருந்தும் அவன் விரலை சூப்பிற பழக்கத்தை விடவில்லை. அவனை அவன்ர தம்பி கோபம் வந்தால் சூப்பி என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பான். அவன்ர அப்பா என்னோடு நல்லமாதிரி. ஈழநாதத்திற்கு அருகில் தான் அவர்களின் வீடு இருந்தது. அவர்களின் வீட்டில்உள்ள பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் எல்லாம் நாங்கள் சாப்பிடுவம். சங்கர் தான் கொண்டு வந்து தருவான். அவன் பாடசாலை முடிந்தவுடன் உடுப்பு மாற்றாமலே ஈழநாதத்திற்கு வந்துவிடுவான். ஏனெனில் அவனுக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். "அங்க உள்ள பழைய பேப்பர்களில் வரும் படங்களை எடுத்து சேகரிப்பது தான் அவனும் பொழுது போக்குகளில் ஒன்றாக இருக்கும்." ஈழநாதத்திற்கு யார் வந்தாலும் வாசலில் உள்ள காவலாளி அனுமதி பெறவேண்டும். ஆனால் அவன் வந்தால் யாரும் ஒன்றும் பேசமாட்டார்கள். அவனும் ஈழநாதத்தோடு ஒன்றித்து போனான். எல்லாரோடும் அன்பாக பழகுவான். ஆனால் அவனின் விரல் சூப்பும் பழக்கம் தான் அடிக்கடி திட்டும் வேண்டுவான். அவனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் மட்டுமல்ல. கிரிக்கெட் தொடர்பான பல விடயங்கள் அவனுக்கு தெரியும். ஏனெனில் அவனில் மூத்தவர்கள் கூட அவனிடத்தில் கிரிக்கெட் தொடர்பாக கேட்பார்கள். அடிக்கடி பார்க்கும் அந்த முகம் அன்றைக்கு அசைவற்று கிடந்தது என்னால தாங்க முடியவில்லை. அவனுக்கு இரண்டு அக்காவும் ஒரு தம்பியும். சங்கரும் தம்பியும் வேறுவேறு விதமான குழப்படிகாரன்கள். எப்படி குழப்படி செய்தாலும் அவர்களின் தந்தை பாசத்தோடு அழைத்து வருவார். இவர்கள் இருவருக்கும் சண்டையும் வரும். இவ்வாறு ஒருநாள் தகப்பன் இறந்தால் யார் கொள்ளி வைப்பது என்ற வாக்குவாதம் இடம்பெற்றது. இதில சங்கர் சொல்லியிருந்தான் “ எட நான் தான் மூத்தவன் நான் தானே கொள்ளி வைக்கவேண்டும்” என்று. ஆனால் தம்பி “நீ என்ன சொல்லுறாய் எனக்கும் அவர் அப்பா தானே நான் தான் கொள்ளி வைக்க வேண்டும்” என்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள். “வாசலில் சிறிய கிடங்கு ஒன்றை கிண்டி.” அதை தெரியாத அளவுக்கு மறைத்து விட்டு தந்தை வரும் வரைக்கும் கதவுக்கு பின்னால் ஒளித்து இருந்தார்கள். அவர்களின் நினைப்பு தந்தை வந்து அந்த கிடங்கில் தடக்கி விழுவார் என நினைத்தே அவ்வாறு செய்தார்கள். ஆனால் உந்துருளியில் செல்லும் போதே இவங்கள் ஏதோ செய்திருக்கிறாங்கள் என்று நினைத்துக்கொண்டு கிடங்கிக்கு அருகால் அவர் செல்லவும் மறைந்திருந்த இவர்கள் “ எட தப்பிட்டார்ரா” என்று குரல் கொடுத்தார்களாம். இதை இவர்களின் தந்தையே வந்து எங்களிடம் சொல்லி சிரிப்பார். அவ்வளவுக்கு இவர்கள் தந்தையோடு நகைச்சுவையா பழகுவார்கள். அன்று அவனின் இழப்பு அவனின் குடும்பத்திற்கு பெரிய இழப்பு தான். என்னால அதை விளங்க முடிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும். வீழ்கின்ற ஒவ்வொரு எறிகணையும் பல உயிர்களை குடித்துக்கொண்டுதான் இருந்தது. எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் பொழுது அவனது அம்மாவும் கடைசித்தம்பியும் முகம் கழுவுவதற்காக சென்று விட்டார்கள். இவன் நித்திரையாகக்கிடந்தவன். நித்திரையோட அவன் போய்விட்டான். அவனுக்கு சாவின் வேதனை தெரிந்திருக்க வாய்பில்லை என நினைக்கின்றேன். தலை ஒரு பக்கமும் கையின் ஒரு பக்கமும் சிதைந்துவிட்டது. அவனின் தந்தை அன்று காலை நிவாரணம் எடுப்பதற்கு சென்று விட்டார். ஆவர்கள் அந்த இடத்திற்கு முதல் நாள் தான் வந்திருந்தார்கள். பதுங்குகுழி இன்னும் அமைக்கவில்லை. பதுங்குகுழி அமைப்பதற்கான பொருட்கள் பொக்கணையில் இருக்கிறதெனவும் அதோடு நிவாரணம் எடுக்கவும் போய்விட்டார் என சங்கரின் அம்மா எனக்கு சொல்லிருந்தார். உடனே நானும் செல்வராசா அண்ணையும் சங்கரின் உடலை தூக்கி கொண்டு எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வைத்தோம். இதற்கிடையில் எனது நண்பர்களும் வந்துவிட்டார்கள். உடனே சங்கர் வழமையாக போடும் ஜுன்சும் சேட்டும் அவனின் பாக்கிக்குள் இருந்து எடுத்துக்கொண்டு போய் அவனை சுத்தம் செய்து அவனுக்கு உடுப்பை மாற்றினோம். மாற்றிவிட்டு நான் அவனின் தந்தை சென்ற இடத்தை நோக்கி சென்றேன். அம்மா சொன்ன இடத்தில் அவர் இல்லை. அவர்களின் உறவினர்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை. அருகில் சங்கக்கடைக்கு போய்டார் அவசரம் என்றால் அங்க போய் பார்க்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். நான் சங்கரின் அப்பாவிடம் போய் “அண்ணை வீட்டில செல் விழுந்துவிட்டது. சங்கர் செத்துவிட்டான்.” “மற்ற ஆக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை" என்று சொன்னேன். உடனே தந்தையை ஏற்றிக்கொண்டு சங்கரின் உடல் வைத்திருந்த வீட்டிற்கு போனோம். எறிகணை வீழ்ந்து அவர்களின் கூடாரம் சிதைந்து விட்டது. இப்ப அவர்களுக்கு தேவை சங்கரை அடக்கம் செய்யவேண்டும். ஆளுக்கு ஆள் எல்லாரும் கதைக்கிறார்கள். சங்கரின் அப்பா என்ர முகத்தை பார்த்தார். எனக்கு விளங்கி விட்டது. சங்கரை அடக்கம் செய்யவதற்கான அனைத்து வேலைகளையும் நானும் சுகந்தன் அண்ணையும் அன்ரனியும் தர்சனும் அருகில் உள்ள சுடலைக்கு சென்றோம். அங்கே அடக்கம் செய்வதற்கு கிடங்கினை வெட்டினோம். எமது சமய முறைப்படி இறந்தவரின் உடலை எரிப்பது தான் வழமை. ஆனால் அந்த நேரத்தில் சமைப்பதற்கு விறகு கூட எடுக்கமுடியாது எப்படி எரிப்பது. அதற்காகவே எல்லாருமே இறந்தவர்களின் உடல்களை புதைப்பார்கள். நாங்கள் கிடங்கு வெட்ட மூன்று அடியில் தண்ணி ஊற ஆரம்பித்துவிட்டது. இனி தண்ணி அள்ளி அள்ளி இன்னும் ஒரு அடி வெட்டினோம். பின்னர் சங்கரை அந்த கிடங்கிலேயே புதைத்தோம். சங்கரை அடக்கம் செய்வதற்கு அருகில் நின்ற நண்பர்கள் சுகந்தன், அன்ரனி, தர்சன் ஆகியோர் இறுதி நாட்களில் இறந்துவிட்டார்கள். அவனது அக்காவும் கிபிர் தாக்குதலில் இறந்ததாக எனது நண்பர்கள் தெரிவித்தார்கள். நாட்கள் நகர நகர இருப்பதற்கே இடமின்றி இறந்தவர்களை புதைக்கமுடியாது இறந்த இடத்திலேயே கைவிட்டு விடவேண்டிய சூழலும், கைவிடப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் போடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நினைவுப்பகிர்வு யுத்தகால வன்னி ஊடகவியலாளர் - சுரேன்

No comments