முல்லைதீவு மக்களுடன் இணைந்து போராட அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கனை தடுத்து நிறுத்தவதற்கு சரியான தீர்மானம் ஒன்றை வடமாகாணசபை எடுக்கவேண்டும். இல்லையே சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உட்பட சகல மாகாணசபை உறுப்பினர்களும், முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் வீதியில் இறங்கி சிங்கள குடியேற்றங்களை எதிர்த்துப் போராட தயாராகவேண்டும்.
மேற்கண்டவாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராம மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மக்கள் மேலும் கூறுகையில், காலத்தால் முந்திய காணி உறுதிகளே அதிகம் கவனத்தில் கொள்ளப்படும் என எல்லா இடங்களிலும் கூறுகிறார்கள். ஆனால் காலத்தால் முந்திய காணி உறுதிகளை அல்லது ஆவணங்களை வைத்திருக்கும் எங்களுடைய காணிகளை பறித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கின்றார்கள். வயல் நிலங்கள் பறிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாரம்பரியமாக நாங்கள் கடற்றொழில் செய்துவந்த பகுதியில் கடற்றொழில் செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது போதாது என்னும் நிலையில் சிங்கள குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இதனால் எங்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டும் எதிர்வரும் 5ம் திகதி வடமாகாணசபையில் விசேட அமர்வு ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிகிறோம். அந்த அமர்வில் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு சரியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவேண்டும். அவ்வாறான தீர்மானம் ஒன்று எடுக்கப்படாத பட்சத்தில் நில ஆக்கிரமிப்புக்களை கண்டித்து முல்லைத்தீவு மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி பேபோராட்டம் நடத்துவதற்கு முதலமைச்சர் உள்ளிட்ட சகல மாகாணசபை உறுப்பினர்களும் தயாராகவேண்டும் என கூறியுள்ளனர்.


இது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது காணிகளை இழந்த மக்கள் மிகுந்த விரக்தி நிலையில் உள்ளார்கள். சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. என்ற கோபமும் மக்களிடம் உள்ளது. இந்நிலையில் 5ம் திகதி நடைபெறவுள்ள விசேட அமர்வில் சரியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எமக்கு மக்களால் வழங்கப்பட்ட கடிதங்கள் அனைத்தும் 5ம் திகதி விசேட அமர்வில் சமர்பிப்பேன் எனவும் ரவிகரன் கூறியுள்ளார்.

No comments