ஈழநாதம் பத்திரிகையின் விநியோகஸ்தர் எங்கள் மகேஸ் அண்ணை!


"மகேஸ் அண்ணையை எங்களோட கூப்பிட்டு வச்சிருந்திருக்கலாம்." “எங்களோட இருந்திருந்தா செத்திருக்கமாட்டார்”. இந்த மாதம் எனக்கு நொந்தமாதம். நேரம்கிடைக்கின்ற வேளைகளில் ஏதாவது நாலு வரிகளையாவது எழுதி வைப்பம் என்று நினைப்பன். இன்றைக்கு என்னால முடிஞ்சது…. சண்டை என்றாலும் சரி சந்தை என்றாலும் சரி விநியோகம் என்பது முக்கியமான ஒரு விடயம். ஈழநாதம் பத்திரிகையின் விநியோகத்தில் ஈடுபட்டவர்கள் தான் மகேஸ் அண்ணை மற்றும் சசிமதன். மகேஸ் அண்ணை யாழ்ப்பாணம் பாதை தடைப்பட்டபின்னர் முல்லைத்தீவிற்கான விநியோகம் மற்றும் புதுக்குடியிருப்பு விளம்பர பணிமனையின் முகாமையாளராக கடமையாற்றியிருந்தார்;. தனது மனைவி பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தனியே விட்டு விட்டு ஈழநாதம் நிறுவனத்திற்காக வன்னிக்கு வந்தவர் தான் நல்லையா மகேஸ்வரன். நாங்கள் “மகேஸ் அண்ணை” என்று தான் சொல்லுவம். அவரோடு நான் நெருக்கமாக பழகாவிட்டாலும் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகள் எனக்கு தெரிந்தாலும் அந்நேரத்தில் நாங்கள் பெரிதுபடுத்துவதில்லை. இப்பொழுது யோசித்துப்பார்க்கையில் தான் ஒவ்வொருவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் அவர்கள் மீதான ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தி நிற்கின்றது. மழைகாலத்தில் வன்னி எப்படியிருக்கும் என்று சொல்லவேண்டியிருக்காது. பத்திரிகையை ஒவ்வொரு பிரதேச விநியோகஸ்தர்களுக்கும் கொண்டு செல்லும் போது மழையில் நனைந்து விடாபடி பக்குவமாக எடுத்துச்செல்லுவார்.
ஆனால் மழைகாலத்தில் தேராவில், உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் வெள்ளம் பாயும். அவருக்கு ஒரு கால் இல்லை. அப்படியிருந்தும் எப்படி அத்தனை பேப்பரையும் கொண்டு போய் இருப்பார் என்பதை நினைக்க முடியவில்லை. தன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சாவதற்கு சில மணித்தியாலங்கள் முன்பு வரை ஈழநாதத்திற்காக பணியாற்றியிருந்தார். 2009 அன்றையநாட்களில் நானும் ஜெகனும் ஈழநாதம் அச்சு இயங்திரங்கள் ஏற்றியிருக்கும் வாகனத்தில் அருகில் நின்றோம். ஒரு அண்ணை “மகேஸ் அண்ணையின் புகைப்படத்தோடு” வந்திருந்தார். “இவர் செத்திட்டாராம் விளம்பரம் போடவேணுமாம்”. சற்று முன்னர் எங்களோடு பேசிவிட்டு போனவர். கொஞ்ச நேரத்திலேயே எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். நானும் ஜெகனும் உடனேயே மகேஸ் அண்ணை இருந்த இடத்திற்கு போய்ட்டோம். மகேஸ் அண்ணை உடல் வெள்ளை வேட்டியால் மூடப்பட்டிருந்தது. அவரின் உறவினர் ஒருவரோடு தான் இருந்தவர். அந்த உறவினர் “ இதில தான் இருந்து கதைத்துகொண்டிருந்தம் தம்பி” “அதில தான் செல் விழுந்தது.” “மகேஸ் அண்ணைக்கு சின்ன துண்டு தான் பட்டது. அதிலேயே செத்திட்டார்” என்று கண்ணீர் மல்கினார். உண்மையில் இப்பொழுது தான் கவலையாக இருக்கிறது. நான் அல்லது ஜெகனோ ஒரு நாள் கூட “அண்ணை சாப்பிட்டிங்களா, எங்க இருக்கிறிங்கள்” என்று கூட கேட்டதேயில்லை. “எங்கட நோக்கம் மிசினறி எல்லாம் பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். பேப்பர் அடிக்கிறது நிக்ககூடாது” இதுதான் குறியாக இருந்தது. நாங்கள் எங்கே போறமோ அன்று அதிகாலை வந்து அருகில் நிற்பார். அன்றைய நாட்களில் எத்தனை நாள் அவர் சாப்பிட்டாரோ தெரியவில்லை. “எங்களுக்கு செல் விழுறதும் பிரச்சினை இல்லை. சாகிறதும் பிரச்சினை இல்லை.” “இப்படித்தான் பல நாட்கள் மண்டை இறுகிப்போய் இருந்திருக்கிறம்.” விழுகின்ற ஒவ்வொரு எறிகணைகளின் சத்தங்கள் இவரைப்போன்றவர்களின் உழைப்பின் அருமையை எங்களுக்கு காட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து எங்களுக்காக வந்து பணியாற்றிய மகேஸ் அண்ணையை எங்களோட கூப்பிட்டு வச்சிருந்திருக்கலாம். “எங்களோட இருந்திருந்தா செத்திருக்கமாட்டார்”. அவர் மனைவி பிள்ளைகளிடம் நாங்கள் எந்த முகத்தோடு போய் ஆறுதல் படுத்தமுடியும். “பல்லாயிரம் பேரை தூக்கிய எங்களுக்கு உங்கள் கணவர்/அப்பாவை தூக்கி இறுதியாக அடக்கம் செய்யமுடியவில்லை.” அடுத்தநாள் உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். நான் போகவில்லை. அதிகாலையே 110 பேர் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். நான் அந்த இடத்திற்கு போய்விட்டேன். என்னால அவரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியவில்லை…..  எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஈழநாதம் ஊடகபணியாளர்கள் சசிமதன் மற்றும் மகேஸ் அண்ணையை இப்புகைப்படத்தில் காணலாம்

ஊடகவியலாளர் சுரேன் அவர்களின் முகநூலில் இருந்து 

No comments