கற்சிலைமடுவில் தொன்மைவாய்ந்த சிவன் ஆலயம் இராணுவத்தால் இடித்தழிப்பு!


முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், கற்சிலைமடுப் பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக அக்காணி உரிமையாளரான கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சான்றுப் பொருட்களை அழித்துவிட்டு அவ்விடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்க இராணுவத்தினர் முயன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, “எனது காணிக்குள் மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று இருந்தது. அதனை இராணுவத்தினர் உடைத்து தரைமட்டமாக்கியதுடன் ஆலயம் இருந்ததற்கான தடயங்களையும் இல்லாமல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் காணப்பட்ட வெள்ளரசு மரத்தடியில் பௌத்த விகாரையை அமைத்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட அப்பகுதி 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. எனினும் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பகுதி புராதன திணைக்களத்தில் (தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில்) பாரப்படுத்தப்பட்டது. அதே வருடம் 6 ஆம் மாதம் வர்த்தமானியில் புராதன திணைக்களத்திற்குச் சொந்தமானதாக எனது காணியும் அறிவிக்கப்பட்டது. அதேவேளை தற்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவினர் அப்பகுதியில் நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், பழமை வாய்ந்த புராதனக் கற்களை எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ச்சியாக புத்தர் சிலைகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்” என்றார். இதேவேளை குறித்த பகுதி புராதன திணைக்களத்திற்குரிய பகுதியெனவும் வேறு எவரையும் அப்பகுதிக்குள் அனுமதிக்க முடியாதெனவும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1921 ஆம் ஆண்டு உறுதி எழுதப்பட்டுள்ளது எனவும் 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வரை படத்தில் குறித்த காணியில் இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் இந்து கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments