மாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை!


நாங்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை யாரும் அறிவதில்லை. அதே போல எங்களின் கிராமமும் யாருக்கும் தெரிவதில்லை என முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் அதிக பாதிப்புக்களைக் கொண்ட ஒரு மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக மாந்தைகிழக்குப் பிரதேசம் காணப்படுகின்றது. இதிலும் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாக எருவில் கிராமம் காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்கள் அனைவரும் போகத்திற்கேற்ப அயல் கிராமங்களில் வேலைகளையும் தமது காணிகளில் சிறிய சிறிய அளவிலான விவசாயச் செய்கைகளையும் மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை கொண்டும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
தமது கலை கலாச்சார பண்புகளை பின்பற்றி ஆடம்பரமற்ற ஏழ்மையான வாழ்க்கை முறையில் இந்த கிராம மக்கள் வாழ்ந்தார்கள். 2008ஆம் ஆண்டிலே யுத்தம் இந்த கிராமத்தை நெருங்கிய போது இங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றது மட்டுமல்லாது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து முள்ளிவாய்க்கால் வரையும் சென்று மீண்டும் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த மக்கள் தமது நிலங்களில் வாழ்வதற்கு ஒரு வீடு கூட இல்லாது நிர்க்கதியான நிலையில் குடியேறினார்கள். இன்று மீள்குடி யேறி ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் வறட்சியும் பொருளாதார நெருக்கடிகளும் இவர்களின் வாழ்வில் புதிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்த இடமளிக்கவில்லை. இதனால் இந்த கிராமத்திலுள்ள மக்கள் வறுமை நிலையில் வாழ்கின்றதாகவே தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்ல அடிப்படை கட்டுமான வசதிகள் கூட சீராக இல்லாத நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் எந்த தொழிலும் இன்றி ஒரு தற்காலிக தகரக் கொட்டகையில் வாழ்ந்து வரும் 77 வயதுடைய வெங்கடாசலம் றெங்கம்மா என்ற மூதாட்டி கருத்து தெரிவிக்கையில், “யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முள்ளியவாய்க்கால் வரை சென்றதாகவும், அங்கே தன்னுடைய மகன் செல்வீச்சில் உயிரிழந்துவிட்டதாகவும், அப்போது அவருடைய ஒரு வயதான மகனை கொண்டு தான் முகாமிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் முகாமிலிருந்து தங்களுடைய சொந்தஇடத்தில் மீள்குடியேறி இப்போது ஒன்பது வருடங்களாகிவிட்டது என்றும் பத்து வயதான சக்திவேல் சங்கீதன் என்ற தனது பேரப்பிள்ளையும் தானும் வாழந்து வருவதாகவும் தெரிவித்த இவர், தன்னுடைய ஏனைய பிள்ளைகள் திருமணம் செய்து விட்டார்கள். அவர்கள் அவர்களது குடும்பத்தையே பார்க்க முடியாத அளவிற்கு கஷ்டப்படுகின்றார்கள், அவர்களிடம் நான் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களாக ஏதாவது இருந்தால் தருவார்கள், நானும் என்னுடைய பேரனும் ஒரு நேரச்சாப்பட்டிற்கே கஷ்டப்படுகின்றோம். பி.எம்.ஏ காசு சமுர்த்திக் காசு, என்று மாதம் ஒரு 3,000 கிடைக்கும், அதை வைத்து எப்படி வாழ முடியும்? எங்களுக்கு வீட்டுத்திட்டம் கூட இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்தக் கிராமத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு கஷ்டங்களை சுமர்ந்தவாறு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கான பிரதான போக்குவரத்துப்பாதை கூட இன்று சீராக இல்லை. இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரும் கல்வி உட்பட ஏனைய அடிப்படைத் தேவைகளுக்காக வெளியூருக்கே செல்ல வேண்டும். இவ்வாறு இற்கையும் பொருளாதார நெருக்கடியும் இவர்களது வாழ்வை இன்னும் கீழ் நிலைக்கு தள்ளியிருக்கின்றது என கவலை வெளியிட்டுள்ளனர்.

No comments