மெரினாவில் வந்து மக்கள் போராட நினைப்பது ஏன்?


தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டி மக்கள் மெரினாவை தேர்ந்தெடுப்பது ஏன்?

கடந்த வருடம் ஜனவரி வரைக்கும் மெரினா என்பது ‘எதையும் தாங்கும் இதயம் உறங்கும்’ ஒரு கல்லறை. அங்குதான் அண்ணா சமாதி இருந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் சமாதி வைக்கப்பட்டது. இப்போது ஜெயலலிதாவும் அங்கே அடைக்களம் புகுந்திருக்கிறார். பொதுவாக வெளியூரில் இருந்து திருமணம் ஆன புது ஜோடிகள் கூட உடனே கிளம்பி சென்னை சமாதிகளை சுற்றிப் பார்க்க வருவது ஒரு தமிழ்க் கலாச்சாரம். ஆனால் இந்த நிலைமையை மாற்றியது ஜல்லிக்கட்டுப் போராட்டம்.
முதலில் ஆள் அடையாளம் தெரியாமல் உதிரி உதிரியாக வந்து சேர்ந்த மக்கள் உலகையே திரும்பி பார்க்கும் அளவுக்கு ‘மெரினா வசந்தம்’ என்று கூறத்தக்க போராட்டத்தை கட்டி எழுப்பினார்கள். தினம் தினம் மெரினா அலையைவிட மக்கள் அலை அதிகமானது. அதை அடக்க முடியாத அரசு தண்ணீர் குடித்தது.
இந்தியாவில் முதன்முதலில் கடலை பார்த்து நடந்தவர் காந்திதான். அவர்தான் தண்டி யாத்திரைக்கு அழைப்புக் கொடுத்த கையோடு உப்புக்கு உரிமைக்கேட்டு புறப்பட்டார். அந்தப் போராட்டம் கடலை நோக்கி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முதல் அறைகூவல். அதுவரை கடல் இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆன்மிக ஸ்தலம். காந்திக்குப் பின் அது கொந்தளிக்கும் ஒரு அரசியல் களம். அதிகாரத்திற்கு எதிராக எழுந்த எழுச்சி.

அரசியல் களத்தில் மெரினாவுக்கு பல முக்கியத்துவம் உண்டு. அங்குதான் பல அரசியல் எழுச்சிகள் எழுந்தன. 1921ல் பாரதி தன் திருவல்லிக்கேணி கூட்டத்திற்கு ஆதரவுக் கேட்டுதான் காந்தியை சந்தித்தார். பல அரசியல் தலைவர்கள் வந்து பேசுவதற்கான களமாக மெரினா இருந்தது. ஆங்கில ஏகாத்தியபத்தியத்திற்கு எதிராக கூடிய பல பொதுக்கூட்டங்கள் மெரினாவில் நடந்துள்ளன. அங்கே அப்படி நடத்தப்பட்ட இடத்திற்கு ‘திலகர் கட்டம்’ என்ற அடைமொழியும் உண்டு.



சத்தியமூர்த்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய மக்கள் இன்னும் எழுச்சி பெறவில்லை என பேசிய போது உள்ளே புகுந்த பாரதி “இல்லை..இல்லை..இந்திய மக்கள் எழுச்சிக் கண்டு விட்டார்கள். விரைவில் வெள்ளை ஆதிக்கம் அழிக்கப்படும்” என பொருள்படும் விதத்தில் பேசிய வரலாறு மெரினாவிற்கு உண்டு. அதே போல இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்த விபின் சந்திரபால் வந்து உரையாற்றிய இடமும் மெரினாதான். ஆக, அரசியல் எழுச்சியின் அடையாளமாக இருந்த மெரினா விடுதலைக்குப் பின், குறிப்பாக அண்ணா மறைவுக்குப் பின் அது ஒரு கல்லறைக் கூடமாக மாறியது. அந்த அடையாளத்தை மறுபடியும் அழித்து அதற்கு மீண்டும் அரசியல் அடையாளத்தை வழங்கியது ஜல்லிக்கட்டு போராட்டம்தான். அவர்கள் கூடியதாகட்டும், இரவு முழுக்க ஆண்ட்ராய்ட் வெளிச்சத்தை எழுப்பியதாகட்டும் எல்லாவற்றிலும் புதியன புகுந்தது. ஆகவே பாரதியின் அடையாளமாக இருந்த மெரினா, எழுச்சியின் அடையாளமாக மறுபடியும் வரலாற்றில் திரும்பியது.

போராடுவதற்கான பல இடங்கள் இருந்தும் ஏன் மக்கள் மெரினாவிற்கு வர வேண்டும்?

அங்குதான் அரசின் சதி இருக்கிறது. நீங்கள் எந்தப் பிரச்னைக்காகவும் கூடி போராடலாம். ஆனால் அதற்கு முறையான அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதியோடு கூடும் போராட்டங்கள் உப்புச் சப்பு இல்லாதவை. காரணம், மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தை ஒதுக்கித்தருவார்கள் காவல்துறையினர். சேப்பாக்கம் போல ஒரு இடத்தில் ஈ எறும்புக்கூட இல்லாத ஒரு இடத்தைக் கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி தருவார்கள்.

ஆங்கே ஆயிரம் லவுட் ஸ்பீக்கர் வைத்துக் கத்தினாலும் அரசின் காதுக்கு நம் கோரிக்கை போகாது. அவ்வளவு ஏன்? நாம் எதற்காக போராடுகிறோம் என்ற விஷயம் கூட மக்களுக்கு முழுமையாகப் போய் சேராது. அரசுக்கும் அதுதான் தேவை. ஆகவே தான் ‘அன் ஆர்கனைஸ்ட் முறை’யில் மக்கள் மெரினாவில் கூட திட்டமிடுகிறார்கள்.

மக்களின் தேவைக்காக கூடி மாதக்கணக்கில் கூடங்குளத்தில் மக்கள் போராடினார்கள். முதலில் அது ஒரு செய்தியாகக்கூட ஆகவில்லை. அடுத்து லேசாக எழுச்சி பெற்றபோது அதை எப்படியாவது ஒடுக்க அரசு முயற்சித்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதை ஒரு விசயமாக முதலில் கண்டு கொள்ளவே இல்லை. அதே போல தான் இன்று ஸ்டெர்லைட். அதை யார் ஒரு பிரச்னையாக பார்க்கிறார்கள். அதேபோல் மீத்தேன் எரிவாயுத்திட்டம். எவ்வளவுதான் அந்த மக்கள் எகிறி குதித்தாலும் அதற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கவில்லை. அதன் பாதிப்பு என்ன என்று தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு புரிய வைக்ககூட முடியவில்லை.
ஆகவேதான் ஒரு பொது கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு இடம் தேவை படுகிறது. அது அதிகார சக்திகளை கதிக்கலங்க வைக்கும் ஒரு இடமாக அது இருக்க வேண்டும். அதன் அடையாளமாகவே மெரினா இருக்கிறது. அதில் கூடி உட்கார்ந்தால் ஒரு வெளிச்சம் கிடக்கும். நாம் பேசும் குரல் வெளியே கேட்கும்.

அதன் அடிப்படையில்தான் மெரினாவிற்கு வருகிறார்கள் போராட்டக்காரர்கள். அதற்கு ஒரு முன்மாதிரியும் இருக்கிறது. அங்கே திரண்ட ஒரு போராட்டம் உலக அளவில் ஒரு வெற்றியை ஈட்டி இருக்கிறது. வெற்றியின் முகமாக தெரிகிறது மெரினா. ஆகவே அதை மக்கள் தேர்வு செய்கிறார்கள். அந்த அடையாளத்தை எப்படியாவது அழித்து பழையபடி ஒரு தற்காலிக உல்லாச ஸ்தல அடையாளத்தை தர அரசு முயற்சிக்கிறது. பாரதி காலத்தில் அரசியல் களமாக இருந்த மெரினா, மீண்டும் உல்லாச சாலையாக மாறி இருக்காலாம். ஆனால் அதற்குள் உறைந்து கிடக்கும் உண்மை காலத்தை தாண்டி மீண்டும் மீண்டும் வெளிப்படும். அதுவே வரலாறு

No comments