கொக்கிளாயில் சிங்களவரது மீதி தமிழருக்கு?



முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்ப் பகுதியில் உள்ளுர் மீனவர்களது பயன்பாட்டிலிருந்த வாடிகளை வழங்க நீதிமன்றமும் பின்னடித்துள்ளது.எனினும் பிரதேச செயலகத்தால் சிங்கள மீனவர்களிற்கு இடையூறு இன்றி ஒதுக்கி வழங்கப்பட்ட புதிய இடத்தில் கொக்கிளாய் சென் அன்ரனிஸ் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தொழிலில் ஈடுபட முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற்காக பிரதேச செயலாளரினால் வாடி அமைப்பிற்கென வழங்கப்பட்ட நிலம் தென்னிலங்கை மீனவர்களிற்கான கரைவலைப்பாட்டுப் பகுதிக்குள் உள் அடங்குவதனால் குறித்த வாடியினை தடை செய்ய வேண்டும் என தென்னிலங்கை சிங்கள மீனவர்களின் சார்பில் நீரியல் வளத் திணைக்களம் 2016ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு நீதி மன்றினில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.


குறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்ற நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


கரைவலைப்பாட்டிற்கான அனுமதியினை நீரியல்வளத் திணைக்களம் வழங்குவதானால் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் வரைபடத்துடனேயே வழங்கப்படவேண்டும் ஆனால் அவ்வாறு அன்றி பிரதேச செயலாளருக்கு தெரியாமலேயே குறித்த பாடுகள் அனைத்தும் நீரியல்வளத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. அத்தோடு குறித்த பிரதேசத்தில் 1983ம் ஆண்டு அத்தனை பாடுகளும் உள்ளூர் மீனவர்களின் பெயரிலேயே வர்த்தகமானி அறிவித்தல் இருந்தது.


ஆனால்; நீரியல்வளத் திணைக்களமோ உரிய முறைப்படிவிண்ணப்பித்தவர்களிற்கே பாடுகளிற்கான அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் குறித்த பாடுகள் அனுமதி எந்தக் காரணம் கொண்டும் மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது. யுத்தம் காரணமாக உள்ளுர் மீனவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் திட்டமிட்ட வகையில் அவற்றினை தென்னிலங்கை மீனவர்களிற்கு வழங்கியுள்ளனர். 

இந்த வழக்கின் ஆரம்பத்தில் உள்ளூர் மீனவர்களிற்கும் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் தென்னிலங்கை மீனவர்களும் அப்பகுதியில் தொழில் புரிவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப.பித்திருந்தபோதும் அத்தடையை உள்ளூர் மீனவர்கள் மதித்து கடலில் இறங்கவில்லை. ஆனால் தெற்கு மீனவர்கள் மன்றின் தடையை மதியாது தொடர்ந்தும் தொழில் புரிந்தனர். 

குறித்த தீர்ப்பின்போது பிரதேச செயலாளரினால் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் நில அளவைத் திணைக்களத்தின் வ 2 என அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அதே இடத்தில் 150 மீற்றர் நீளப்பகுதி 6 தூண்கள் இடப்பட்டு எல்லைபிடப்பட்டு உள்ளூர் மீனவ அமைப்பின் பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றது.



குறித்த பகுதியில் மீனவர் சங்கம் இறங்கு துறை அமைத்து தொழில்புரிய அனுமதிக்கப்படுவதோடு கரைவலைத் தொழில் புரிபவர்கள் உள்ளிட்ட எந்த வகையான தொழிலும் இடையூறு ஏற்படுத்த முடியாது. அத்துடன் இனி வரும் காலத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது கரைவலைப்பாடு விநியோகத்திலும் இப்பகுதியை குறித்த மீனவ சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்த பின்பே வழங்க வேண்டும் எனவும் நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments